புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சர்வதேச மகளிர் தினம் உலகெல்லாம் கொண்டாடப்படுவது வழக்கம். மகளிர்தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன? என்ற வினாவுக்கு பல வரலாற்றியல் ரீதியான
சம்பவங்கள்
முன்னிலைப்படுத்தப்பட்டாலும் பால் ரீதியான அடக்குமுறைகளுக்கும் நெருக்குவாரங்களுக்கும் பாரபட்சங்களுக்கும் ஆட்பட்ட பெண்ணினம் வெகுண்டெழ
முற்பட்டதன் பின்னணியை அடிகோலாகக் கொண்டு சர்வதேச பரப்பெங்கும் மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது என்ற பொதுவான உண்மையை சர்வதேச மகளிர்
தினம் உணர்த்துகின்றது.

உலகில் பெண் விடுதலை பற்றிய கோஷங்கள்
வலுப்பெற்று வருகின்ற நிலையில் தமிழ்ப் பெண்களின் விடுதலை பற்றியும் அதிகம் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். மேற்குலக நாடுகளிலுள்ள கலாசார வரன்முறைகளை பின்பற்றத் துடிக்கும் எமது தமிழ்ப் பெண்களின் வாழ்வியல்
கோலங்களில் பாரியளவு மாற்றங்களை போருக்குப் பின்பான சூழல் எமக்களித்துள்ளது.

தமிழ்ப் பெண் என்பவள் இப்படித்தான் வாழவேண்டும்
என்ற எழுதப்படாத நிர்ப்பந்தம் காரணமாக அவர்களின் வாழ்வியல் எல்லைப்படுத்தப்பட்டிருந்தது. உலகமே கண்டு வியக்கும் அளவிற்கு ஏனைய நாட்டு மக்களது கலாசாரங்களுடன் ஒப்பிடுகையில் அதி உத்தமமான கலாசார அம்சங்களை தன்னகத்தே கொண்டு விளங்கிய கலாசார முறைமையானது தமிழ்ப் பெண்களை மையப்படுத்தியே பின்னப்பட்டிருந்தது என்ற உண்மையை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

அந்தளவிற்கு அன்றைய தமிழ்ப் பெண்கள் பண்பாடு மிகுந்தவர்களாகவும் கற்பு ரீதியான ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். அது மாத்திரமன்றி
ஆணுக்கு வேண்டிய பணிவிடைகளை ஆற்றுவது பெண்ணுக்குரிய தலையாய கடமைகளுள் ஒன்று.‘உத்தியோகம் புருஷ லட்சணம்' என்ற வழக்காறு அன்றைய
காலகட்டத்தில் இயம்பப்பட்டதனால் ஆண் வர்க்கத்தினரே பொருளீட்டும் முனைப்பில் ஈடுபட எத்தனிக்கப்பட்டனர். அன்றைய தமிழ்ச் சமூகம் விட்ட மகா தவறு யாதெனில்
பெண்களை சிசுக்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக நோக்கிக் கொண்டமையாகும். பெண்களின் உணர்வுகளையோ உள்ளார்ந்த ஈடுபாடுகளையோ விருப்பு வெறுப்புக்களையோ அன்றைய எம் சமூகம் கருத்திலெடுக்கவில்லை. இதன் காரணமாக விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் தமது உணர்வுகளை தமக்குள் அமிழ்த்திக் கொண்டனர்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற
சித்தாந்தமும் வலுப்பெற்றதனால் அக்காலப் பெண்களின் கல்வி நிலையும் தாழ்ந்த நிலையிலேயே இருந்ததையும் காணலாம். தமிழ்ச் சமூக அமைப்பில் பெண்களை எந்தளவு தூரம் குறிப்பாக கல்வியில் தரம் தாழ்ந்தவர்களாக கணிக்கப்பட்டு
அடக்கி ஒடுக்கப்பட்டதான வரலாற்றியலையே பார்க்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் இனப்பகை மூண்ட சில எடுத்துக்காட்டுக் களையும் முன்வைப்பது
சாலப் பொருத்தமானதாகும்.தமிழர்களின் உரிமைப் போராட்டமானது வீறு கொண்டு வெடித்தமைக்கு தமிழ் மாணவர்களின் கல்வி நிலையும் பெரும்பங்கு
வகித்தது1960, 61 களில் பெரும்பாலான பாடசாலைகள் தேசிய
மயமாக்கப்பட்டமையினால் பாடவிதானங்கள் பாடசாலை நிர்வாகங்களில் அரசியல் இடம்பிடித்துக் கொண்டன.

அத்துடன் சிங்களம் அரச கரும மொழியாக்கப்பட்டதனால் அரச பதவி பெறுவதில் நாட்டம் கொண்ட பல தமிழ் மக்கள்
சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் தமது பிள்ளைகளைக் கல்வி கற்பித்தனர். 1970 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசினால் அறிமுகஞ்செய்யப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைத் தெரிவு செய்யும்முறை தொடர்பான
தரப்படுத்தல் முறையானது இனங்களுக்கிடையிலான பகையை மேலும் வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியது. இது குறித்து சிங்கள வரலாற்று ஆசிரியரான சி.ஆர்.டி. சில்வா குறிப்பிடும்போது ”1977 அளவில் சிங்கள அரசிற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரதான பிரச்சினையாக பல்கலைக்கழக அனுமதி அமைந்தது.
தாம் புறக்கணிக்கப்படுவதாக எண்ணிக் கசப்படைந்த தமிழ் இளைஞர் ஓரணியாகத் திரண்டனர்'' என்கிறார். பின்னர் அனுமதிக்கான விதிகளில் மாற்றங்களைத்
தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கொண்டு வந்தாலும் பாதிப்பு
நிரந்தரமாகிவிட்டது.

ஓர் இனத்தை அடக்கி ஒடுக்க அவர்களது சுதந்திரத்தில் தலையீடு செய்ததினால் ஏற்பட்ட விரக்தி தமிழ் மக்களை ஆயுதப்
போராட்டம் வரை இட்டுச் சென்றது. அந்த ஆயுதப் போராட்டம் 1983 இற்குப் பின்னர் முகிழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து தமிழ்ப் பெண்களின் வாழ்வியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாயின. அகப்பை பிடித்த பெண்களின் கரங்கள் ஆயுதம்
ஏந்தவும் செய்தன. கடந்த 30 ஆண்டுகளாக தமிழர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு பலம் பெற்ற நிலையில் தமிழ்ப் பெண்களின் வாழ்வியலிலும் திருப்பங்கள் ஏற்பட்டன. அடக்கு முறைக்கு எதிராக எவ்வாறு தமிழ் இளைஞர்கள் போராட முற்பட்டார்களோ அதேபோல்
பெண்களும் அடிமைத்தளைகளை உடைத்தெறிந்து கொண்டு பெண் விடுதலைக்காகவும் போராடத் தலைப்பட்டனர்.ஒருபுறம் இனவிடுதலைக்காக போராடுவதுடன் மறுபுறம் தம் மீது வலிந்து திணிக்கப்பட்டிருந்த அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்தெழ முற்பட்டனர். வெற்றியும் கண்டனர். அவர்கள் வெற்றி கண்ட பல
விடயங்களில் சீதனக் கொடுமை, சமகல்வி வாய்ப்பு, உத்தியோகங்களில் பெண்களின் பங்கு, பெண் சமத்துவம் அதாவது அதுவரை ஆண்களுக்குரியதாக்கப்பட்டிருந்த வீரம்
 செறிந்த தியாகங்களை பெண்களும் பகிர்ந்து கொள்ள முற்பட்டனர்.

மொத்தத்தில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற கட்டாப்பு தமிழ்ப் பெண்களின் வாழ்வியலில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.காலமாற்றத்தின்
விளைவாக தமிழரின் உரிமை போராட்டம் இடைநடுவில் கருகிவிட அதுவரை வீரம் படைக்கும் தேவதைகளாக வலம் வந்த பெண்கள் போர் முடிவுக்கு வந்த பின்னர் உலகில் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏராளமான இறந்த இளம்
பெண்களின் நிர்வாண உடல்கள் உலக தொலைக்காட்சிகளின் காட்சிப் பொருளாகின.

யுத்தம் முடிவுற்று மூன்றாடுகள் கடந்துவிட்டன. பெண்களுக்கு இருந்து வந்த பாதுகாப்பரண் சிதைக்கப்பட்டிருப்பதால் பெண்களின் வாழ்வியல் தற்போது கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. பெண்களுக்கு வீதிகளில் மாத்திரமன்றி
வீடுகளிலும் கூட பாதுகாப்பற்ற சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. பெற்ற தந்தையாலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் சம்வங்களும் நடைபெற்று
வருகின்றன. அது மாத்திரமல்லாமல் கலாசார சீர்கேடான நடவடிக்கைகளில் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதுகாப்பற்ற உறவால் முறை தவறிப் பிறந்த சிசுக்களை உயிருடன் சூடாறும் உடனே வெட்டிப்
புதைக்கும் அவலமும் அரங்கேறி வருவது பெண்களின் மீது தாய்மையின் மீது சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது. மேலைத்தேய கலாசார மோகம் தமிழர்
பிரதேசத்தில் தலை விரித்தாடுவதால் முன்னர் வாழ்ந்த தமிழர்க்கேயுரிய கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகி தமது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு தவிக்கும் பெண்களே ஏராளம். எனவே தமிழர் பிரதேசங்களில் மகளிர் தினத்தை பெரும் எடுப்பில் கொண்டாடிவரும் மகளிர்
அமைப்புக்கள் மகளிர் தினம் கொண்டாடுவதுடன் மட்டும் தமது கடமைகளை வரையறை செய்யாது யதார்த்த பூர்வமாக தமிழ் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அணுக
வேண்டியது அவசியமாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top