புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி என்று ஒரு படம் வந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். நம்முடைய செய்தி அதைப்பற்றியதல்ல சன் தொலைக்காட்சியில் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஓடி இல்லத்தரசிகளை அழவைத்துக்கொண்டிருக்கும் சீரியல்களைப் பற்றித்தான். சலிக்காமல் அவற்றைப்
பார்க்கும் இல்லத்தரசிகள், மின்வெட்டுப் பிரச்சினையால் ஒருநாள் அவற்றைப் பார்க்காவிட்டால் கூட பித்து பிடித்தது போலாகிவிடுகின்றனர். சரியாக இந்த நேரத்தில் இந்த சீரியல் பார்த்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அழுது தீர்க்கின்றனராம். அப்படி என்னதான் இருக்கிறது அந்த சீரியல்களில் தெரிந்து கொள்ளுங்களேன்.

அர்ச்சனாவில் அழுகையில் திருமதி செல்வம்

சன் தொலைக்காட்சியில் இரவு 8 மணியாகிவிட்டால் போதும் இல்லத்தரசிகளுக்கு சோறு இறங்காது. டாப் மோஸ்ட் ஆக இருக்கும் இந்த சீரியல் நாயகன் செல்வமும் அர்ச்சனாவும் அப்படி ஒரு அந்நியோன்னிய தம்பதிகளாக இருந்தனர். பின்னர் செல்வத்தின் கவனம் நந்தினியின் பக்கம் திரும்பவே ஒரே அழுகை மயம்தான் அர்ச்சனா. 1200 எபிசோடுகளை தாண்டியாவிட்டது. இன்னும் என்னதான் சொல்லப்போகிறாரோ தெரியலையே இயக்குநர்.

அத்திப்பூக்களில் அடிவாங்கும் அஞ்சலி

மதியம் இரண்டு மணியாகிவிட்டால் போதும் அத்திப்பூக்களை பார்த்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார்கள் இல்லத்தரசிகள். அந்த அளவிற்கு அத்திப்பூக்களின் அடிமையாக மாறிவிட்டனர். ஆயிரம் எபிசோடுகளை தாண்டியாகிவிட்டது. இன்னமும் கதை ஒரே மாதிரிதான் போகிறது. அண்ணி – நாத்தனார் பழிவாங்கல் கதைதான். வீட்டில் சிலிண்டர் திருடுபோவது கூட தெரியாமல் இந்த சீரியலை பார்க்கின்றனராம் இல்லத்தரசிகள்.

காணமல் போன கஸ்தூரி

கஸ்தூரி என்று 6மணிக்கு ஆரம்பித்து கடைசியில் 11 மணிக்கு மாற்றப்பட்டது இந்த சீரியல். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஜவ்வு இழுப்பு இழுத்து கடைசியில் எப்படி கதையை முடிப்பது என்று தெரியாமல் ஒருவாழியாக முடித்தார் இயக்குநர். என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் படத்தை சுட்டு எடுத்த இந்த சீரியல் கடைசியில் 1000 நாட்களுக்கும் மேல் இல்லத்தரசிகளை அழவைத்துவிட்டு அடங்கிப் போனது.

தெரியாமல் விழிக்கும் தென்றல்

தமிழ் – துளசி தம்பதியரை சுற்றியதுதான் தென்றலின் கதை. இதோ அதோ என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முடியப்போகிறது. சித்தி கொடுமை, மாமியார் கொடுமை, என கதாநாயகியை அனுபவிக்க வைத்து அழவைக்கின்றனர். இதைப்பார்த்து இரவு சாப்பாடு கூட கணவருக்குப் போடாமல் கண் கலங்குகின்றனராம் குடும்பத்தலைவிகள். ஒரே இயக்குநர் இரண்டு சீரியல் எடுத்தால் எப்படி சொதப்புவார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

உற்சாகமிழந்த உறவுகள்

பங்காளி சண்டையை பற்றிய கதைதான் இது. கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஓடி அசந்து போய் கடைசியில் முடிந்தே போனது. வெற்றிகரமான 500 வது எபிசோட், அட்டகாசமான 800 வது எபிசோடு என விழா எடுத்தது அநேகமாக இந்த சீரியல் தயாரிப்பாளர்களாத்தான் இருப்பார்கள். கடைசியில் கதையை முடிக்க முடியாமல் ஒருவழியாக நிறுத்திக்கொண்டார்கள்.

செல்வாக்கு இழந்த செல்லமே

இது ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிப்பு. கிட்டத்தட்ட இருதாரக் கதைதான். கதாநாயகன், அண்ணன், தம்பி என எல்லாரையும் இரண்டு மனைவிகளை திருமணம் செய்ய வைத்து கதையை ஒரு வழியாக கொண்டு போகிறார் ராதிகா. எப்படியோ மூன்று வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் 1000 மாவது எபிசோடை எட்டிப்பிடிக்கப்போகிறது.

நலிவடைந்த நாதஸ்வரம்

திரு பிக்சர்ஸ் திருமுருகன் தயாரித்து இயக்கியுள்ள நாதஸ்வரம் தொடர் குடும்ப உறவுகளை பற்றி சொல்லும் கதை. அண்ணன் தம்பி உறவு, பழிவாங்கல், மாமியார் கொடுமை என சீரியலுக்கு உரிய அத்தனை லட்சணங்களும் இதிலும் உண்டு. எப்படியோ 800 எபிசோடுகளை எட்டிப்பிடிக்கப்போகிறது. மெட்டி ஒலியில் வித்யாசமான இயக்குநராக தெரிந்த திருமுருகன் சினிமாவுக்கு போய் வந்த பின்னர் நலிவடைந்து விட்டார் என்றே கூறுகின்றனர் விமர்சகர்கள்.

முன்னோடி தொடர்கள் மெட்டி ஒலி, சித்தி, கோலங்கள்

முன்பெல்லாம் டிவி சீரியல்கள் குறைந்த பட்சம் 100 எபிசோடுகளை தாண்டுவதே அபூர்வம். முதன் முதலாக அதிகநாட்கள் அழவைத்த சீரியல்கள் என்ற பெருமையை பெற்றவை திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலும், ராதிகாவின் சித்தி சீரியலும்தான். இதனையடுத்து திருச்செல்வம் இயக்கிய ‘கோலங்கள்’ தொடர் நான்கு வருடங்களாக ஓடி எப்போதடா இந்த சீரியல்கள் முடியும் என்று கேட்க வைத்த காலம் உண்டு.

ஆளே இல்லாத டீக்கடையில…

நாட்டில் மின் வெட்டுப் பிரச்சினை 18 மணிநேரம் நிலவுகிறது. இதில் இரவு நேரத்தில் ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை கரண்ட் கட் ஆகிறது. ஆனாலும் ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றுவது கடமை என்பதுபோல இந்த சீரியல்கள் விடாமல் ஒளிபரப்பாகிக்கொண்டுதான் இருக்கின்றன. கரண்டு வரும் நேரத்தில் சமையலைக்கூட மறந்து இவற்றை பார்த்து அழுது தீர்க்கின்றனர் இல்லத்தரசிகள் என்பதுதான் கொடுமை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top