ஜப்பானின் மேற்கு ஒசாகா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் சானே நகமுரா (வயது 25). இவருக்கு 3 வயதில் ஒரு மகள் மற்றும் ஒன்றரை வயதில் மகன் இருந்தனர்.கணவன் இல்லாமல் தனியாக வாழ்ந்த நகமுராவுக்கு ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் குழந்தைகளை தனியாக வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்லத் தொடங்கியிருக்கிறார்.
பல சமயங்களில் இரவு முழுவதும் அந்த ஆண் நண்பருடன் தங்கிவிட்டு காலையில்தான் வீடு திரும்புவாராம். இதனால் இரவு முழுவதும் இரண்டு குழந்தைகளும் தனியாக வீட்டில் பரிதவித்துள்ளன.
இந்நிலையில், அதே ஆண்டு ஜூன் மாதம் துவக்கத்தில் குழந்தைகளை தனியாக விட்டுச் சென்ற நகமுரா, அந்த மாத கடைசியில்தான் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது, பல நாட்கள் பட்டினியாக கிடந்த குழந்தைகள் இரண்டும் இறந்து கிடந்தன.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகமுராவைக் கைது செய்தனர். வழக்கை விசாரித்த கீழ்கோர்ட், குழந்தைகளுக்கு போதிய உணவு கொடுக்காமல் கொலை செய்த நகமுராவுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நகமுரா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில், நகமுராவின் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக