புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அந்த அணியின் ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி
ஆட்டமிழக்காமல் 98 ரன் விளாசினார்.ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் கேமரான் ஒயிட், டிகாக், தலைவன் சற்குணம் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக சங்கக்கரா, பெரேரா, அக்ஷத் ரெட்டி இடம் பெற்றனர். ராயல்ஸ் அணியில் ராகுல் சுக்லாவுக்கு பதில் அறிமுக வீரர் சச்சின் பேபி சேர்க்கப்பட்டார்.

சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்களாக அக்ஷத், தவான் களமிறங்கினர். அக்ஷத் 2 ரன் எடுத்து சாண்டிலா சுழலில் வாட்சன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் சங்கக்கரா 4 ரன் எடுத்து பாக்னர் வேகத்தில் வெளியேறினார். நம்பிக்கை நட்சத்திரம் தவானும் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப சன்ரைசர்ஸ் அதிர்ச்சியின் பிடியில் சிக்கியது.

இதிலிருந்து மீள்வதற்குள்ளாகவே கரண் 6, விஹாரி 4, பெரேரா 4 ரன் எடுத்து அணிவகுப்பு நடத்த, ஐதராபாத் 6.1 ஓவரில் 29 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து அதளபாதாளத்தில் விழுந்தது. 50 ரன்னாவது தாண்டுவார்களா? என்ற கேள்வி எழுந்த நிலையில், டேரன் சம்மி  அமித் மிஷ்ரா ஜோடி உறுதியுடன் போராடியது. இருவரும் 7வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த அமித் 21 ரன் எடுத்து பாக்னர் வேகத்தில் கூப்பர் வசம் பிடிபட்டார்.

ஆசிஷ் 14 ரன் எடுத்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், சிறப்பாக விளையாடிய சம்மி அரை சதம் அடித்தார். அவர் 60 ரன் எடுத்து (41 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) பாக்னர் வேகத்தில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து ஓரளவு கவுரவமான ஸ்கோரை எட்டியது. ராயல்ஸ் பந்துவீச்சில் பாக்னர் 5, சாண்டிலா 2, கூப்பர், பின்னி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் டிராவிட், ரகானே களமிறங்கினர். ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இஷாந்த் வீசிய 2வது ஓவரில் ராயல்ஸ் 6 ரன் எடுத்தது. மூன்றாவது ஓவரை வீசிய ஸ்டெயின், 3வது பந்தில் ரகானேவை (1) வெளியேற்றியதுடன், அந்த ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் மெய்டனாக வீசி அசத்தினார்.

அடுத்து டிராவிட் உடன் அதிரடி வீரர் வாட்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் உறுதியுடன் விளையாடி ரன் சேர்த்தனர். டிராவிட் பொறுமையாக கம்பெனி கொடுக்க, வாட்சன் அதிரடியில் இறங்கினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஸ்டெயின் தவிர்த்து மற்ற ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தனர். டிராவிட் 36 ரன் எடுத்து (35 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். அதன் பிறகும் அதிரடியைத் தொடர்ந்த வாட்சன், ஐதராபாத் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தார்.ராயல்ஸ் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வாட்சன் 98 ரன் (53 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்), ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நான்கு ஓவரில் 20 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றிய ராயல்ஸ் பந்துவீச்சாளர் பாக்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top