புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா - தமிழக தக்கலையை அடுத்த ஆற்றுகோணம் மணலிக் கரையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 22), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுஜா (22). இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மண வாளக்குறிச்சி
பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு ராஜசேகர் படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களுக்கு 1 1/2 வயதில் வினோதினி என்ற குழந்தை உள்ளது. சுஜா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ராஜசேகர் செல்போனில் அடிக்கடி பல பெண்களுடன் பேசி வந்ததாகவும், இது தொடர்பாக சுஜா அவரிடம் கேட்ட போது ராஜசேகர் மனைவி என்றும் பாராமல் சுஜாவை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ராஜசேகர் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி விடுவாராம். கடந்த சில நாட்களாக அவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்ப வெகுநேரமாகி உள்ளது. இது சுஜாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

நேற்று வேலைக்கு சென்ற ராஜசேகர் இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தார். அப்போது சுஜா ஏன் இவ்வளவு நேரம் கழித்து வருகிறீர்கள்? என கேட்டுள்ளார். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜசேகர் சுஜாவை அடித்து உதைத்து தாக்கி உள்ளார்.

இதில் சுஜா மயங்கி விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத ராஜசேகர் மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் சுஜா உடல் முழுவதும் தீயில் கருகினார். உடனே ராஜசேகர் மனைவியை காப்பாற்றுவது போல நடித்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சேர்த்த சிறிது நேரத்தில் சுஜா இறந்து போனார்.

இதுகுறித்து கொற்றிகோடு போலீசாருக்கும், சுஜாவின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அப்போது ராஜசேகர் ஆஸ்பத்திரியில் இருந்து ஓட்டம் பிடித்து தலைமறைவானது தெரிய வந்தது.

இதற்கிடையே, ஆஸ்பத்திரிக்கு வந்த சுஜாவின் குடும்பத்தினர் ராஜசேகர் ஏற்கனவே வரதட்சணை கேட்டு சுஜாவை சித்ரவதை செய்து வந்ததாகவும், அவர் தான் சுஜாவை தீ வைத்து எரித்து கொலை செய்திருக்க வேண்டும், அதனால்தான் அவர் தலைமறைவாகி விட்டார் எனவும் கூறினர்.

சுஜாவின் குடும்பத்தின ரிடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோசப்சிரில் விசாரணை நடத்தினார். அப்போது ராஜசேகர் மீது புகார் கொடுக்குமாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து சுஜாவின் தாயார் வள்ளியம்மாள் கொற்றிகோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான ராஜசேகரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top