புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உத்தர பிரதேச மாநிலத்தில், தங்கையிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வாலிபர்களை தட்டி கேட்ட அண்ணனை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தர பிரதேச மாநிலம், எடாவா பகுதி அருகே உள்ள பர்த்தனா உஸ்ரஹார் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பங்கஜ் யாதவ் (18) அவரது தங்கையுடன் பேருந்திற்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் பங்கஜ் யாதவின் சகோதரியிடம் குறும்பு செய்து தகாத முறையில் நடந்துக்கொள்ள முயற்சித்தனர்.

இதனை பங்கஜ் யாதவ் தட்டிக் கேட்டபோது, கோபமடைந்த அவர்கள் தடி மற்றும் கற்களால் அவரை கடுமையாக தாக்கினர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பங்கஜ் யாதவ், ஆக்ரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

பங்கஜ் யாதவின் சகோதரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து பொதுமக்கள் நேற்று காலை எடாவா-லக்னோ நெடுஞ்சாலையில் பங்கஜ் யாதவின் பிரேதத்தை கிடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த உ.பி. பொதுப் பணித்துறை அமைச்சர் சிவ்பால் சிங் யாதவ், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த பங்கஜ் யாதவ் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்ததன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் திரும்பி சென்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், ஆபத்தில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வருபவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது துரதிஷ்டவசமானது
 
Top