புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் மோகத்தால் யாழ்ப்பாணப் பெண்களின் கனவுகள், உணர்வுகள் அனைத்தையும் கொலை செய்கின்றனர் பெற்றோர்கள். அயல் வீட்டில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் வெளிநாட்டுப் பணம். அதனால் ஏற்படும் ஆடரம்பர
வாழ்வு என்பன பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனங்களில்
வெளிநாட்டு மோகம் தாண்டவம் ஆட வைக்கின்றது.

வெளிநாட்டில் உள்ள ஒரு ஆணைத் தன் பிள்ளைக்குத் திருமணம் செய்து வைப்பதன் ஊடாக அயல் வீட்டில் ஏற்பட்டிருக்கும் ஆடம்பரம், சுயநல வாழ்க்கையைத் தாங்களும் அனுபவித்துக் கொள்ளலாம் என்ற ஆசையால் தாங்கள் பெற்ற பிள்ளையின் மனங்களில் நிறைந்து கிடக்கும் உணர்வுகள், கனவுகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து விடுகின்றனர் பெற்றோர்கள். 

அயல் வீட்டில் ஏற்பட்ட வெளிநாட்டுப் பணப் புழக்கம் ஒரு பக்கம் இருக்க, நான்கு, ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் வீட்டில் தாண்டவம் ஆடும் வறுமையும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. 
இதனால் வறுமையை எண்ணி சமுதாயச் சந்தையின் போட்டி வியாபாரத்தில் பருவமடையாமல் பறிக்கப்படுகின்றது யாழ்ப்பாணப் பெண்களின் வாழ்க்கை.

தான் பெற்ற பெண் பிள்ளைகளைத் தாத்தாவுக்கு வாழ்க்கைப்படத் தயாராக்குகின்றனர் பெற்றோர்கள். பெண்களுக்குள் இருக்கும் கனவுகள் விலைபேசப்படுகின்றன வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு.

பெண் பிள்ளைகளின் இதயத்தின் வலிகளைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்களால் தன் உணர்வுகளைத் தனக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டு பெற்றோரின் அற்ப ஆசைக்காகவும், வறுமைக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர் பெண் பிள்ளைகள்.

முகம், பெயர் தெரியாத ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, கண்காண இடத்தில் கடல் கடந்து சென்று, அவன் எப்படியானனோ? அல்லது அவனுக்கு அங்கு வேறு தாரம் உண்டோ? என்று தெரியாமல் அங்கு சென்று ஒரு நாதியற்றவளாய், கேட்பாரற்று நிலைதடுமாறு, தனிகுனிந்து தனது புதுவாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வாழ்க்கையால் அனுப்பி வைக்கப்படும் பணம் இங்கு அதிஉச்ச ஆடரம்பர வாழ்க்கைக்கும், சுகபோக வாழ்க்கைக்கும் செலவழிக்கப்பட, அங்கு அவளின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்படுகின்றது. 

எனவே ஒட்டுமொத்தமாக அத்தனை பெற்றவர்களையும் குறை சொல்வது பொருத்துடையதன்று.

அதாவது பெற்றவர்களுக்கு முன், உறவுகளுக்கு முன் பெற்ற பெண் பிள்ளைகளை வாழ வைத்து அதில் மகிழ்ச்சி காண எத்தனையோ பெற்றோர்களுக்கு விரும்பம் இருந்தாலும் கூட, 

தற்போது யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விலை போல எகிறிக் கொண்டு செல்லுகின்றது சீதனம் என்ற பெயரில் வாங்கப்படும் கப்பம்.

இதனாலும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் நிலை பெரிதும் பாதிப்படைவதுடன், சீதனம் இன்றிப் பெண் எடுக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளையே நாடி நிற்கின்றது. 

அதிலும் அழகு குறைந்த பெண்ணாக இருந்தால் வெளிநாட்டு மாப்பிள்ளை விரும்ப மாட்டார். எனவே ஒட்டுமொத்தத்தில் பெண்களைப் பெற்றவர்களின் நிலை கவலைக்கிடமாகவேயுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top