புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குடும்பங்களில் கணவன், மனைவியரிடையே அதிகரித்துவரும் திருமணத்துக்கு அப்பாலான தகாத உறவுகள், பாலியல் பிறழ்வு நடவடிக்கைகள், திருமணம் முடித்த ஆண்களால் ஏமாற்றப்படும் இளம் பெண்கள் என ஏராளமான பிறழ்வு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவில் கண்ணீர் மல்க முறைப்பாடுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் முடித்து பல ஆண்டுகளாக கணவன் மனைவியராக வாழ்ந்து வந்த சிலர், இடையில திருமணத்துக்கு அப்பாலான உறவுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பாக இரண்டு தரப்புக்களிடமிருந்தும் ஏராளமான முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமது கணவன்மார் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சில பெண்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தமது மனைவி வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஆண்களாலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசி வாயிலான தொடர்புகள் மூலமே இவ்வாறான திருமணத்துக்கு அப்பாலான உறவுகள் பேணப்படுவதாக இரண்டு தரப்பு முறைப்பாடுகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் அறியாத வகையில் இரகசியமாக கைத்தொலைபேசி மூலமாக இவ்வாறான திருமணத்துக்கு அப்பாலான உறவு பேணப்படுவதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திருமணம் முடித்து பிள்ளைகளையும் கொண்டிருக்கும் 35-40 வயது மதிக்கத்தக்க ஆண்களால் 16-18 வயது பெண்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் கண்ணீருடன் பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவில் முறைப்பாடு தெரிவிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

18 வயதுக்குக் குறைந்த பெண்கள் இவ்வாறு காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டால் அதற்கெதிராக ஆட்கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று குறிப்பிடும் பொலிஸ் தரப்பு, மற்றபடி வயது வந்த பெண்கள் தொடர்புபடும் சம்பவங்கள் தொடர்பாக தம்மால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறது.

திருமணத்துக்கு அப்பாலான உறவு தொடர்பாக பொலிஸாரிடம் செய்யப்பட்டுள்ள இவ்வாறான முறைப்பாடுகளில், 67 வயதுடைய பெண்மணி ஒருவருடைய முறைப்பாடு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. தன்னுடைய கணவர் வேறொரு இளம் பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக இவர் கண்ணீருடன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

எனினும், திருமணத்துக்கு அப்பாலான தொடர்புகள், பாலியல் பிறழ்வு நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் எந்த இடமும் கிடையாது என்றும் பொலிஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறான தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து ஆலோசனை கூறுவது அல்லது அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு அப்பால் வேறெதுவும் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள் பொலிஸார்.

காதலித்து ஏமாற்றப்பட்டது தொடர்பான பெரும்பாலான முறைப்பாடுகளில் இளைஞர்கள் சம்பந்தப்படவில்லை என்றும், பெரும்பாலும் திருமணம் முடித்து, பிள்ளைகளையும் கொண்டிருக்கும் வயது வந்த ஆண்கள் தொடர்பாகவே இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சுயவிருப்பத்தின் பேரால் நடைபெற்றிருக்கக்கூடிய இவ்வறான சம்பவங்கள் குறித்து பொலிஸார் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறு திருமணத்துக்கு அப்பாலான உறவு, பாலியல் பிறழ்வு நடவடிக்கைகள், வயது வந்த ஆண்களால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவது போன்ற நடவடிக்கைகள் இவ்வளவுக்கு நடைபெற்று வருவது தமக்கு அதிர்ச்சியளிப்பதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸார் அன்றி, சமூக அளவிலேயே கவனம் செலுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் என்று பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பாலியல் கல்வி, சட்டம் பற்றிய தெளிவு, விழிப்புணர்வுச் செயற்பாடுகள் போன்ற மூலமும், ஊடகங்களில் பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகள் மூலமுமே இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், ஊடகங்கள் இந்த விடயத்தில் அதிகளவு பங்களிப்புச் செலுத்த முடியும் என்றும் பொலிஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top