டிசம்பர் இருபத்தியொராம் திகதி உலக அழிவு பற்றிய நம்பிக்கை பொய்த்தது!
21ஆம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் அழியும் என்று நம்புவோர் நூற்றுக்கணக்கானோர் அந்நிகழ்வுக்காக காத்திருந்தனர்.
பண்டைய மாயா நாகரீக கணிப்பின் அடிப்படையில் இவர்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
மெக்ஸிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் அழிந்துபோன மாயா சமூகத்தாரின் கோயில்களைச் சுற்றி பெருமளவில் இதற்கு முன்பு இல்லாத அளவில் மக்கள் கூடியிருந்தனர்.
உலகம் அழிகின்ற அந்த நேரத்தில் வேற்று கிரக விண்கலங்கள் வந்து தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆட்கள் கூடியிருந்தனர்.
வியாழன் நள்ளிரவில் உலகம் அழியும் என்றும், சிலர் அந்த நேரம் ஜிஎம்டி 11.00 என்றும் நம்பினர். ஆனால் அந்த நேரங்கள் கடந்துவிட்டன.
ஒரு யுகம் முடிந்து வேறொரு யுகம் ஆரம்பிப்பதைத்தான் இந்த புராதன காலக் கணிப்பு குறிக்கிறதே ஒழிய உலக அழிவைக் குறிக்கவில்லை என மாயா நாகரீகம் பற்றி ஆராய்ந்த நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.
வெள்ளிக்கிழமை உலகம் அழியும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும் மக்கள் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா கூறுகிறது.
நானூறு கோடி வருடங்களாக நமது பூமி அழியாமல் இருந்துகொண்டிருக்கிறது என்றும் 2012ல் அது அழிவதற்கான எந்த ஒரு அச்சுறுத்தலும் தற்போதைக்கு இல்லை என்றும் நாஸா தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக