புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


என் மகளின் வாழ்வை சீரழித்தவர்களுக்கு மரணதண்டனை வழங்குங்கள் என்று டெல்லி பலாத்கார சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கண்ணீர்
மல்க கோரிக்கை
விடுத்துள்ளார்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடெங்கும் போராட்டம் வலுத்து வருகிறது.

டெல்லியில் கடந்த 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருவதால் தலைநகரம் ஸ்தம்பித்துள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேசிய பாதிக்கப்பட்ட மாணவியின்
தந்தை, மகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் போராடுவது தமக்கு ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார்.

அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அமைதிகாக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் மகளின் வாழ்க்கையை சீரழித்த கயவர்களுக்கு மரணதண்டனையைத் தவிர வேறு எந்த தண்டனை வழங்கினாலும் தமக்கு திருப்தியளிக்காது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் உயிரைக் காப்பாற்ற டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இதுவரை அந்த மாணவிக்கு 6 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் அவர் உடல் நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே உள்ளது.

சிறுகுடல் அகற்றப்பட்டுவிட்டதால் திரவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. ரத்த அணுக்கள் படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மாணவி சீராக மூச்சு விட்டதால் அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது.

ஆனால் நேற்று அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. இதையடுத்து மாணவிக்கு மீண்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் வயிற்று பகுதியில், பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் அடுத்தடுத்து கிருமி தொற்று ஏற்பட்டப்படி உள்ளது. அந்த கிருமி தொற்றை கட்டுப்படுத்த டாக்டர்கள் மிக கடுமையாக போராடியபடி உள்ளனர்.

பழைய, துருபிடித்த கம்பியால் தாக்கியதாலேயே பல்வேறு வகை கிருமி தொற்று ஏற்பட்டுவிட்டது. இதை உறுதிபடுத்தியுள்ள டாக்டர்கள் அதற்கு ஏற்ப மாணவிக்கு சிகிச்சையை மாற்றியுள்ளனர். தற்போது மாணவி நல்ல உணர்வுடன் உள்ளார். அறுவை சிகிச்சை செய்துள்ள பகுதிகளில் அதிகம் வலிப்பதாக கூறி வருகிறார்.

என்றாலும் அவர் மனம் தளரவில்லை. 6 அறுவை சிகிச்சைக்கு பிறகும் மாணவி மனதைரியத்துடன் இருப்பதாக, அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அதனி தெரிவித்தார். எனினும் இன்னும் 10 நாட்களை மாணவி கடக்க வேண்டும். அதுவரை எதுவும் சொல்ல இயலாது என்று கூறி உள்ளனர்.
 
Top