புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அடுத்த பாப்பரசராக கறுப்பினத்தவர் ஒருவர் தெரிவாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பாக தகவல் வெளியாகியுள்ளது.



பாப்பரசர் 16ஆம் ஆசிர்வாதப்பர் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் அடுத்த பாப்பரசர் யார் என கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

அடுத்த பாப்பரசர் தெரிவில் முன்னணியில் இரு கறுப்பினத்தவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐரோப்பியர்கள் இருவரும் பாப்பரசர் தெரிவில் உள்ளனர். இதன் காரணமாக இங்கு இனப்பிரச்சினை எழுவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது வயது முதிர்ச்சியின் காரணமாக, கடந்த சில மாதங்களாக தனது உடலும், மனமும் தனது ஆன்மீகப் பணிகளை செய்யமுடியாத அளவுக்கு மோசமடைந்து வந்ததனாலேயே தான் பதவி விலகுவதாக பாப்பரசர் 16ஆம் ஆசிர்வாதப்பர் அறிவித்துள்ளார்.

இன்னுமொருவர் பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்த பதவி வெற்றிடமாக இருக்கும்.

முடிந்தவரை வெகுவிரைவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று வத்திக்கான் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

1415 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு பாப்பரசர் பதவிவிலகுவது இதுதான் முதற்தடவையாகும். செலெஸ்டைன் 5 என்னும் போப்பாண்டவர்தான் இதற்கு முன் பதவி விலகியவராவார். பொதுவாக தேர்ந்தெடுக்கப்படும் பாப்பரசர் அவர்களது ஆயுள் வரை அந்த பதவியில் இருப்பார்கள்.

பாப்பரசரின் இந்த முடிவு அவரது நெருங்கிய சகாக்களுக்குக் கூட மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாக வத்திக்கான் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். அவருக்கு பார்கின்ஸன் நோய் இருப்பதாக சில உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

மேற்குலகில் மதசார்பின்மை அதிகரித்து உலகின் ஏனைய பகுதிகளில் இஸ்லாம் வளர்ச்சி பெற்றுவரும் சூழலில் கத்தோலிக்க படிப்பினைகளை பாதுகாப்பவராக தன்னை பாப்பரசர் கருதிவந்தார். இவர் கொஞ்சம் பழமைவாதியாகவும் பார்க்கப்படுகிறார்.

முன்னைய பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் அவர்களின் கீழ் தலைமை ஒழுக்க கட்டுப்பாட்டாளராக இவர் பணியாற்றினார்.

கருத்தடை விவகாரத்தில், உயிருக்கு ஒரு புனிதத்துவம் இருக்கிறது, அதனைக் கெடுக்ககூடாது என்று தார்மீக துல்லியத்தை வலியுறுத்தியவர் பாப்பரசர் பெனடிக்ட்.

ஆனால், தனது பதவிக்காலத்தில், கத்தோலிக்க திருச்சபையை ஆக்கிரமித்திருந்த சிறார் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இவர் எதிர்கொண்டார்.

இஸ்லாம் குறித்தும் இவர் ஒரு கடும்போக்கு நிலையை எடுத்திருந்தார். முகமது நபியை கடுமையாக விமர்சித்த 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ ஆட்சியாளரை ஆதாரம் காட்டி இவர் கூறிய கருத்துக்கள் பல முஸ்லிம்களின் மனதை புண்படச் செய்தது.

பாப்பரசரின் பதவி விலகல் குறித்து பல நாடுகளின் தலைவர்களும் அதிர்ச்சி வெளியிட்டிருக்கிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top