புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒருதலைக் காதலால் ஆசிட் வீச்சுக்குள்ளான தமிழகத்தின் காரைக்கால் சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.


புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் ஜெயபாலின் மகள் வினோதினி. இவர் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அவரை ஒருதலையாக காதலித்த, கட்டிடத் தொழிலாளி சுரேஷ். கடந்த தீபாவளியன்று, வினோதினி ஊருக்கு சென்ற போது ஆசிட் ஊற்றி வினோதியின் முகத்தை சிதைத்து விட்டான்.

சுரேஷ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கான். இதில் கண் பார்வை பறிபோன நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் கடந்த சில மாதங்களாக வினோதினி சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினோதினி உயிரிழந்தார். ஆசிட் வீச்சில் உயிர் இழந்த வினோதியின் தந்தை ஜெயபால் தனியார் மருத்துவமனையில் கதறி அழுதார். மகளின் இழப்பை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது...

என் மகள் உயிருடன் திரும்ப வருவாள் என்றுதான் நம்பி இருந்தோம். இப்படி எங்களை அனாதையாக்கி சென்று விட்டாளே. அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகதான் டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் இன்று காலையில் திடீரென இறந்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.

அவள் கண் பார்வை இழந்து உயிரோடு இருந்தாள்கூட பரவாயில்லை. அவளை நாங்கள் பார்த்து கொண்டே இருந்திருப்போம். இப்படி எங்களை தனியாக விட்டு அவள் சென்று விட்டாளே...

சிகிச்சையின்போது அவள் வேதனைப்படுவதை நாங்கள் பார்த்து அழுதோம். அப்போது அவள் என்னிடம், நான்பட்ட கஷ்டத்தை அவனும் (சுரேஷ்) அனுபவிக்கணும் அப்பா... என்று கூறினாள்.

அதுதான் இப்போது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. என் மகள் வாழ்க்கையை சிதைந்து சின்னா பின்னமாக்கிய அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் ஒரு நொடியில் உயிரி போய்விடும்.

அது போதாது... என் மகளைபோல அவனும் வேதனையை அனுபவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வினோதியின் தாய் மாமா ரமேஷ் கூறியதாவது...

இந்த கொலைக்கு அவனுடன் மேலும் 3 பேர் உடந்தையாக இருந்தனர். அவர்களையும் பொலிசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கஷ்டத்தை சந்திக்க வேண்டும்.

வலியால் அவள் துடித்ததுபோல அவனும் துடிதுடிக்க இறக்க வேண்டும். அப்போதுதான் அவளுடைய ஆத்மா சாந்தியடையும்.

எங்கள் குடும்பத்தில் பி.டெக். படித்த ஒரே மருமகள் வினோதினிதான். அவள் கண் பார்வை பெறவும், உயர் மருத்துவ சிகிச்சை பெறவும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் நிதி உதவி வழங்கினர்.

எல்லோரும் பிரார்த்தனையும் செய்தார்கள். ஆனால் அவை அத்தனையும் வீணாகி விட்டது. மருத்துவ சிகிச்சை பலன் அளிக்கவில்லை.

இரத்தத்தில் அடைப்பு ஏற்பட்டதாகவும் உடலில் புரோட்டீன் சத்து குறைந்து விட்டதாகவும் டாக்டர்கள் கூறினார்கள். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழந்ததாக டாக்டர்கள் தரப்பில் கூறினார்கள். இன்று காலையில்தான் உடல்நிலை மோசமானது பற்றி கூறினார்கள். அதுவரையில் அவள் நன்றாக இருப்பதாகத்தான் டாக்டர் ஜெயராமன் எங்களிடம் கூறினார்.

அரச வைத்தியசாலையில் டாக்டர்களின் கருத்து கேட்க சென்றோம். அங்குள்ள சூழல் வினோதினிக்கு பிடிக்கவில்லை. அதனால் மீண்டும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். இங்கு 2 மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவள் சுகமாக திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையில்தான் இருந்தோம். ஆனால் அந்த நம்பிக்கை வீணாகி விட்டது.

அவள் சாவிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக இருக்காது என்று நினைத்துதான் அதிக செலவு ஆனாலும் பரவாயில்லை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கும் சரியாக டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

வினோதினி இறப்பு குறித்து தனியார் மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரி டாக்டர் ஆர்.ஜெயப்பிராகஷ் கூறியதாவது...

ஆசிட் வீச்சில் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்ற வினோதினி இன்று காலை 9.10 மணிக்கு உயிர் இழந்தார். அவருக்கு 2 மாதமாக இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இடையில் அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு அவருடைய பெற்றோர் கேட்டு கொண்டதற்கு இணங்க மீண்டும் சேர்த்தோம்.

சிகிச்சையின் போது 3 முறை அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி இறக்கும் தருவாய்க்கு சென்றார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக காப்பற்றப்பட்டார்.

இன்று காலையில் மீண்டும் அவரது நிலைமை திடீரென மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. என்றார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top