புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தீபாவளி என்றால் எந்த சூழ்நிலையிலும் ரசிகர்களுக்கு வஞ்சகம் செய்யாதவர் நடிகர் விஜய். அதற்கு சரியான எடுத்துக்காட்டுத் தான் சந்திரமுகியுடன் போட்டியிட்ட சச்சின் திரைப்படமாகும். அதே வகையில் இம்முறையும் துப்பாக்கியால் சரமாரியான வேட்டுக்களைத் தீர்த்துத் தள்ளியிருக்கிறார் நம்ம விஜய்.


முருகதாசின் இயக்கத்தில் கஜால், ஜெயராம் மற்றும் சத்தியன் கூட்டணியில் கலக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹரிஸ்ஜெயராஜ் இசையமைக்க தாணு தயாரித்திருக்கிறார்.

ஒரு மாஸ் ஹீரோவை வைத்துப் படம் எடுப்பது எவ்வளவு சவாலானது என்பதை சாதித்துக் காட்டியிருக்கும் முருகதாசை புகழாமல் இவ்விடத்தில் நகர முடியவில்லை. ஒரு விறு விறுப்புக்கான திரைப்படத்தில் ஆரம்பம் முதலே விறு விறுப்பை புகுத்துவது தான் சாலச்சிறந்தது. ஆனால் விஜய், ரஜனி போன்றோரின் படத்தில் இவை சாத்தியமற்ற ஒன்று காரணம் முதல் அரை மணித்தியாலங்களை ரசிகர்கள் தம் கட்டுப்பட்டுக்குள் வைத்துக் கொள்வதால் பார்வையாளனுக்கு சலிப்பு ஏற்படுத்தி படத்துக்கான முதல் விமர்சனமே எதிர்மறையானதாக அமைய வாய்ப்பிருக்கிறது.

அதைத் தீர்க்கும் வகையில் முதலில் ஒரு சண்டை, அதன் பின் ஒரு பாடல் அடுத்த 10 நிமிடத்துக்குள் கஜால் அகர்வாலின் அறிமுகம் என ரசிகர்கள் அனைவரையும் கத்தி களைக்க வைத்து விட்டு தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

நடிகர் விஜயின் வழமையான நையாண்டி நகைச்சுவைகள் இருந்தாலும் இம்முறை சற்று முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டே கூறுவதால் படத்தின் சீரியஸ் தன்மையை ஆரம்பத்திலேயே உணர முடிகிறது. உதாரணத்திற்கு முதல் காட்சியிலேயே விஜயிற்கான பெண் பார்க்கும் படலத்துக்கு செல்லும் போது விஜய் கூறுவார். “வந்த ரயட்டுக்கு ஒரு குளியல் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டுப் போகலாமே” அதற்கு தாயார் யதார்த்தமாக இம்முறையும் முடியாது உனக்கு வயசு ஏறிக்கிட்டே போகிறது என்பார். அதற்கிவர் ஒரு நாளைக்குள்ள வயசு ஏறிடாதும்மா என தனது வழமையான பாணியில் முறாய்ப்பாக சொல்லி எம்மை நகைக்க வைத்து விடுகிறார்.

கதைச் சுருக்கத்தில் ராணுவத்தில் இருக்கும் விஜய் மும்பைக்கு விடுமுறையில் வருகிறார். அங்கே பொலிஸில் இருக்கும் சத்தியனுடன் ஊர் சுற்றுவது தான் வேலை. ஒரு முறை இவர்கள் பயணம் செய்த வண்டியில் ஒரு தீவிரவாதி வேறேங்கோ கொண்டு செல்ல முற்பட்ட குண்டு வெடிக்கிறது. ஆனால் அத்தீவிரவாதியை பிடித்து பொலிசில் கொடுக்கிறார். அவன் ஒரு பொலிசாராலேயே தப்பிக்க வைக்கப்பட இவரது வேட்டை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் பொலிசாரைக் கூட தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு செய்யத் தூண்டுகிறது.

கதையில் பெரியளவு வித்தியாசத்தைக் காணமுடியாவிட்டாலும் விஜயின் வழமையான பாணியில் இருந்து பெரிதும் மாறுபட்டதாகவும் அளவுக்கதிகமான ஹீரோயிசம் இல்லாமலும் கில்லியில் பார்த்த விஜயின் இன்னும் ஒரு புதிய தோற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது.

நடனத்துக்காக தினேசும், சிறீதரும் விஜயை நன்றாகப் புழிந்து விட்டார்கள் என்பது அவரது நடன அசைவுகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.

கஜால் அகர்வால் அழகு விருந்து படைத்தாலும் திரில் நிறைத்த கதைப் பகுதிக்குள் நுழைக்கப்படவே இல்லை என்பதால் ஆரம்பத்தில் மட்டும் ஒரு சில காட்சிகளால் மனதுக்குள் பதிந்ததோடு மறைந்து போய் விடுகிறார்.

ஒரு திரில் படத்துக்கு பின்பகுதியில் பாடல்களை நுழைப்பது எவ்வளவு தொய்வை ஏற்படுத்தும் என்பதை முருகதாஸ் உணரத் தவறிவிட்டார்.

தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும் இடத்திலும், தீவிரவாதிகளை அவர்கள் இடத்திலேயே தங்கையை பணயமாக வைத்து அழிக்கும் இடத்திலும் விஜய் ஸ்டைலில் ஒரு கலக்குக் கலக்கி விடுகிறார். துப்பாக்கி சுழற்றலக்காகவே அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.

தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும்காட்சியும் அதற்காக விஜயின் கெட்டப்பும் fox, axn ல் ஒளிபரப்பான பிரபல தொடரான 24 hours ஐயும் அதில் நடித்த ஜக் பவர் ஐயும் அப்படியே நினைவுபடுத்திச் செல்கிறது. அதே போல கையில் சிப்ஸ் பதித்துச் செல்லும் இடத்திலும் misson imposible ஐ நினைவூட்டுவது போல உள்ளது.

சந்தோஷ் சிவன் தனது ஒளிப்பதிவை திறம்படச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பஸ் மற்றும் கப்பல் குண்டு வெடித்தால் காட்சிகள் மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் இப்படத்திலும் இரு தங்கைகள் மூலம் தங்கை சென்டிமென்டை கையாண்டிருக்கிறார். அனைவரும் எதிர் பார்த்தது போல படத்தில் அலட்டல் அலப்பாறைகள் நிறைந்த எந்நவொரு பஞ்ச் வசனத்தையும் விஜய் பேசவில்லை.

அதே போல ஹரிசின் இசையும் விஜயின் ஸ்டைலுக்கும் படத்தின் விறுவிறுப்புகம்கும் பெரிதும் ஒத்துப் போவது மிகப் பெரிய பிளசான விடயமாக இருக்கின்றது. மொத்தத்தில் துப்பாக்கியானது விஜயின் இன்னொரு பரிமானத்தைக் காட்டிய திரைப்படமாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top