புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வடிவேலு ஒரு படத்தில் குடித்துவிட்டு, உன்னைப் பார்த்து கண் அடிச்சேனா, கையைப் பிடிச்சி இழுத்தேனா, கட்டிப் பிடிச்சி முத்தம் தந்தேனா என்று சொல்லிக் கொண்டே கடைப் பெண்ணிடம் அத்தனையும் செய்துவிடுவார் இல்லையா.
அதேதான் இந்தப் படமும். வன்முறைக்கு எதிராகப் பேசுவதாக பாவனை செய்து கொண்டே படம் முழுக்க வெட்டி சாய்க்கிறார்கள். கிளைமாக்ஸ் அதன் உச்சம்.

தெருப்பெண்ணை கேலி செய்தான் என்பதற்காக அடுத்த ஊர்க்காரனை வெட்டி சாய்க்கிறார் சசிகுமாரின் அப்பா. தப்பிக்கையில் மாட்டிக் கொள்கிறார். முகம் தெரிந்தால் வீரத்துக்கு களங்கம் ஆகிவிடும் என்று கூட வந்தவர்களிடம் தனது தலையை வெட்டச் சொல்கிறார். அப்படி தலைவெட்டப்பட்டு ஊருக்குள் சாமியாக வாழ்கிறார்.

கிண்டல் செய்ததுக்காக கொலை செய்யும் பைத்தியக்காரத்தனத்துக்கு பெயர் வீரம். படம் நெடுக இந்த வீர மயம்தான். அப்பாவைப் போல் புள்ளையும் சண்டியராகிவிடக் கூடாது என்று அம்மா சரண்யாவுக்கு கவலை. ஆனால் மகன் அப்பாவை மிஞ்சிய சண்டியர். ஹீரோ இல்லையா... கோயிலில் திருடினாலும் நல்லதுக்குதான் திருடுவார். அதேமாதிரி அவரா பிரச்சனைக்கு போக மாட்டார். பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.

சரண்யா இனி அம்மாவாக நடிக்கக் கூடாது என தடை போடலாம். அவர் எப்படி சிரிப்பார், எப்படி உருகுவார், எப்படி அழுவார் எல்லாமே ஆடியன்ஸுக்கு அத்துப்படி. மகன் கல்யாணத்துக்கு சம்மதித்ததை அறிந்ததும், அவன் சொன்னா செய்திருவானே என்று பரவசமடைகிற போது நம்மையும் அறியாமல் புன்னகைத்துவிடுகிறோம்.

ரவுடிப் பசங்களை காதலிக்கும் சலித்துப்போன ஹீரோயின் வேடம் லட்சுமி மேனனுக்கு. நேரடியாக அவர் காதலைச் சொன்ன பிறகும் அவள் என்னை காதலிக்கிறாளா என்று சசிகுமார் சந்தேகப்படுவதும் கிப்ட் வாங்கி தருவதும், பின்னணியில் பழைய பாடல்கள் ஒலிக்க சுப்பிரமணியபுரம் பாணியில் ஸ்லோமோஷனில் நடப்பதும் தாங்க முடியவில்லை. இடையிடையே வரும் காமெடிதான் காப்பாற்றுகிறது. பனியனில் பை தைக்க சொல்ல, பனியனையே பையாக தைக்கிறாரே, ரசித்து சிரிக்கலாம்.

தென்தமிழகத்து ஆதிக்கசாதி மனோபாவத்தை படம் நெடுக பார்க்க முடிகிறது. பெண்ணை ஒன்று சாமியாக மதிப்பார்கள், இல்லை சாணியாக மிதிப்பார்கள். ஆனால் இந்த இரண்டிலும் வெளிப்படுவது, பெண் எனக்கு சொந்தமான பொருள், அவளை நான் பாதுகாக்க வேண்டும், அவள் எனக்கு அடிமையானவள் என்ற ஆதிக்க மனோபாவம்தான். ஆம்பளைங்களோட கோபமும், குடியும்தான் பெண்ணுங்களை சீரழிக்குது... ஒரு பெண்ணு நினைச்சாதான் நீயும் நானும் ஆம்பளை... போன்ற வசனங்கள்கூட இந்த சாமி மனோபாவத்தின் வெளிப்பாடுதான். அது கடைசியில் பெண்களின் கையில் கத்தியை தந்து சங்கறுப்பதில்தான் முடியும். அப்படிதான் முடிந்திருக்கிறது. சாமியும் வேண்டாம், சாணியும் வேண்டாம் சக மனுஷியாக எப்போது பார்க்கப் போகிறார்கள்...?

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. உற்று கேட்டால் வேறு பாடல்கள் பலதும் நினைவுக்கு வருகிறது. கதைக்கேற்ற ஒளிப்பதிவு, எடிட்டிங். இடைவேளைக்குப் பிறகு வரும் சசிகுமார், லட்சுமி மேனனின் நீண்ட ரொமான்ஸ் காட்சிகள் - காமெடியையும் மீறி திரைக்கதையை தொய்வடைய செய்கிறது. திரைக்கதையை அலைபாய விடாமல் சீராக்கியிருந்தால் படத்தின் வெற்றியின் சதவீதம் கூடியிருக்கும்.

வன்முறையை எதிர்க்கும் பாவனையில் வன்முறையை பிரதானப்படுத்தியிருப்பது போலவே பெண்ணை மதிக்கும் பாவனையில் அவள் ஆணால் பாதுகாக்கப்பட வேண்டிய அவனுக்கு சொந்தமான பொருள் என்ற ஆணாதிக்க பார்வையை படம் முன் வைக்கிறது. இது ஆபத்தானது. அந்தவகையில் குட்டிப்புலியை கெட்ட புலி என்றுதான் சொல்ல வேண்டும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top