திருச்சூரை சேர்ந்த ஒரு தாய், கல்லீரல் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு கல்லீரலையும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகளுக்கு சிறுநீரகமும் அளிக்க முன்வந்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மனக்கொடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி கிரிஜா (52). இவர்களுக்கு சினோஜ் (34) என்ற மகனும், சிமி (30) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர். கிரிஜாவின் கணவர் ராஜன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால், சினோஜுடன் கிரிஜா வசித்து வந்தார்.
இந்நிலையில், சிமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்த போது அவருடைய 2 சிறுநீரகங்களும் செயலிழந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சில மாதங்களுக்குள் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் சிமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் கூறினர். இதனால், கிரிஜா அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், மனதை தேற்றிக்கொண்ட அவர் தனது ஒரு சிறுநீரகத்தை மகளுக்கு கொடுக்க தீர்மானித்தார். டாக்டர்களிடம் இது குறித்து கிரிஜா ஆலோசனை நடத்தினார். கிரிஜா சிறுநீரகம் தானம் செய்ய டாக்டர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்கான முன்னேற்பாடுகளை டாக்டர்கள் செய்து வந்தனர்.
இந்த நேரத்தில்தான் கிரிஜாவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மகன் சினோஜ் ஒரு நாள் வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருடைய கல்லீரல் செயலிழந்தது தெரிய வந்தது. உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் சினோஜின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் கூறினர். இதை கேட்டு சினோஜ் அதிர்ச்சி அடைந்தாலும், கிரிஜா அதிர்ச்சி அடையவில்லை. தன்னுடைய கல்லீரலை தந்து மகனின் உயிரை காப்பாற்ற அவர் தீர்மானித்தது தான் அதற்கு காரணம். கிரிஜாவின் இந்த முடிவுக்கு டாக்டர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வரும் 4ம் தேதி எர்ணாகுளத்திலுள்ள அமிர்தா மருத்துவமனையில் மகனுக்காக தனது கல்லீரலை கிரிஜா கொடுக்க உள்ளார். அன்றுதான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அமிர்தா மருத்துவமனை டாக்டர்கள் தீர்மானித்துள்ளனர். மகனுக்கு கல்லீரலை கொடுத்த பிறகு உடல்நலம் தேறினால் மகளுக்கு தனது சிறுநீரகத்தை கொடுப்பது உறுதி என்கிறார் இந்த தாய். ஆனால் இந்த அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக பணம் தேவைப்படும். கிரிஜாவின் குடும்பத்தால் இந்த அளவிற்கு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது. இதையறிந்து கேரளாவில் உள்ள ஏராளமான சமூக தொண்டு நிறுவனங்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக