இந்தியாவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6வயது குழந்தை மர்ம நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்து, உடலை கிணற்றில் வீசி சென்றனர். திருவள்ளூர் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே சூரகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (38). அதிமுக பிரமுகரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மனைவி சந்திரா (32). இவர்களது மகள் கீர்த்தனா (8), மகன் பிரியதர்ஷன் (6). கீர்த்தனா, இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். பிரியதர்ஷன், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தான்.
பிரியதர்ஷனுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு போகவில்லை. காலை 11 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். ‘வேறு எங்கும் போகக்கூடாது. இங்கேயே விளையாடிக் கொண்டிரு’ என்று மகனிடம் கூறிவிட்டு சந்திரா வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடைக்கு போயிருந்தார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய அவர், விளையாடிக் கொண்டிருந்த மகனை காணாமல் திடுக்கிட்டார். அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார். இதுபற்றி பூபாலனுக்கு தகவல் தரப்பட்டது. அவரும் விரைந்து வந்து உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்து பிரியதர்ஷனை தேடினார்.
சிறுவனின் போட்டோவை வைத்துக்கொண்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். கிராமத்தின் அருகே குளம், குட்டை, கிணற்று பகுதியிலும் தேடினர். எந்த தகவலும் கிடைக்காததால் மப்பேடு போலீசில் பூபாலன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை யாராவது கடத்திச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சூரகாபுரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள வயலூர் கிராமத்தை சேர்ந்த சிலர், அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். அப்போது கிணற்றில் சிறுவன் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மப்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிராம மக்களும் திரண்டு வந்தனர். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டிஎஸ்பி பாலச்சந்தர், இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சிறுவன் சடலத்தை மீட்டனர். மேலே கொண்டு வந்து பார்த்தபோது, இறந்து கிடந்தது காணாமல் போன பிரியதர்ஷன் என்பது தெரியவந்தது. அவனது வாய் துணியால் கட்டப்பட்டிருந்தது. சிறுவனை கடத்திய மர்ம நபர்கள், அவன் சத்தம் போடாமல் இருக்க வாயை துணியால் கட்டியிருக்கலாம் என தெரிகிறது.
பிரியதர்ஷனை கடத்தி வந்து கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர். சிறுவன் கழுத்தில் அணிந்திருந்த நரி பல் போட்ட ஒரு பவுன் செயின் அப்படியே இருந்தது. எனவே, நகைக்காக கொலை நடக்கவில்லை என தெரியவந்தது.
சிறுவன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முன்விரோதத்தில் சிறுவனை யாராவது கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பூபாலனுக்கு விரோதிகள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்து வருகின்றனர். சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பெற்றோர் கதறல்
பிரியதர்ஷன் பெற்றோர் கூறுகையில், ‘‘எங்கள் மகன் பள்ளியில் நன்றாக படிப்பான். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பான். எல்லோரிடமும் பாசமாக பழகுவான். நாங்கள் யாருக்கும் எந்த கெடுதலும் செய்தது கிடையாது. என் மகனை இரக்கமின்றி இப்படி கொன்று விட்டார்களே. இந்த படுபாதகமான செயலை செய்தவர்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டார்’’ என்று கதறி அழுதனர்.
பட்டாசு வெடித்த தகராறு காரணமா?
பூபாலன் உறவினர் கோபி கூறுகையில், ‘‘தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது கிராமத்தில் தகராறு ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை பூபாலன் தாக்கியுள்ளார். இது கிராமத்தில் பெரிய பிரச்னையாக மாறியது. கிராம பெரியவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதை தவிர பூபாலனுக்கு வேறு யாருடனும் விரோதம் கிடையாது’’ என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக