புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொங்கல் திருநாள் தமிழர் வாழ்வில் அதன் தொன்மையான சுவடுகளை கொண்ட ஒரு பண்டிகையாகும். உழவர்கள் தங்கள் அறுவடைகளை முடித்து அந்த போகம் சிறப்புற நிகழ்ந்ததற்கு சூரியனுக்கு பொங்கல் படைத்து கொண்டாடும் உழவர்களின் திருநாளே பொங்கல்.

சூரியனையும், நிலத்திற்கு வளப்பம் சேர்க்கும் வான்பொருட்கள் அனைத்திற்குமான படைப்பு வழிபாட்டு நாளாகவே பொங்கல் உழவர்களால் கொண்டாடப்படுகிறது. நிலம் என்பது, வேறு எந்த பண்பாட்டிலும் இல்லாத அளவிற்கு தமிழர் பண்பாட்டில் அதி முக்கியத்துவம் பெற்ற ஒன்று. பண்பாட்டையே 5 நிலப்பகுதிகள் கொண்ட திணை ஒழுக்கங்களாக வகுத்திருப்பது தமிழர் பண்பா‌ட்டில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமிய வாழ்வை அதன் அனைத்து பண்பாட்டுத் தன்மைகளோடும் சிறப்புறக் கொண்டாடும் இந்தப் பொங்கல் பண்டிகை நகரவாசிகளும் கொண்டாடி நமக்கெல்லாம் உணவு அளிக்கும் அந்த உழவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

தமிழ் பண்டைய நூல்களில், செய்தித் தாள்களிலும், பத்திரிக்கைகளிலும், பேச்சு வழக்கிலும் நின்று நிலைத்துப் போன "வேளாண்மை" என்ற சொல்லுக்கு இப்போது கொடுக்கும் பொருள் கொடுக்கப்படவில்லை.

வேளாளர் பிரிவினர் பெரும்பாலும் உழவுத் தொழிலை கொண்டிருந்ததால் அது வேளாண்மை என்று வந்ததாக விளக்கம் கூறினாலும் இதற்கு தொல்காப்பியம்,திருக்குறள்உள்ளிட்டநூல்களில்ஆதாரமிதொல்காப்பியத்தில்தான் முதன் முதலில் "வேளாண்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். தொல்காப்பியம் பொருளதிகாரம் என்ற தலைப்பின் கீழ் உள்ள களவியல் பிரிவில் 105ஆம் இலக்க சூத்திரத்தில் 'வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்' என்று கூறப்பட்டுள்ளது . இதற்கு பல்வேறு உரையாசிரியர்கள் விளக்கம் அளித்திருப்பினும், பெரும்பாலும் இளம்பூரணர் உரையே பின்பற்றப்படுகிறது. இந்த சூத்திரத்திற்கு உரை எழுதிய இளம் பூரணர் 'தலைவி உபகாரம் எதிர்பட்ட விருப்பின் கண்ணும்' என்று விளக்கம் கூறியுள்ளார்.மீண்டும் இதே பொருளதிகாரம் 112ஆம் சூத்திரத்தில் "வேளாண் பெரு நெறி" என்ற வரி வருகிறது. இதற்கும் இளம்பூரணர் வேளாண் என்பது உபகாரம், பெரு நெறி என்பது உபகாரமாகிய பெரு நெறி என்றே விளக்கம் அளித்துள்ளார். அதாவது இந்த இரண்டு சூத்திரங்கள் மூலம் நாம் அறிவது என்னவெனில், வேளாண் என்ற சொல்லுக்கு விவசாயம் என்ற பொருள் தமிழர் வழக்கில் கொடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. அதாவது இது உபகாரம் என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது.

எட்டுத் தொகை நூல்களில் தலையாய நூலான கலித்தொகையில் ஒரு பாடலில் (101) வேளாண்மை செய்தன கண் என்று வருகிறது. அதாவது கண்கள் உபசாரம் செய்தன. கண்கள் உபசாரமாக செய்கை செய்தது என்ற பொருளே உரையாசிரிய மரபில் கூறப்பட்டுள்ளது. மேலும் நிகண்டுகள் என்ற சொல்லியல் தொகுதிகளிலும் வேளாண்மை என்ற சொல்லுக்கு விருந்தோம்பல் உபசரித்தல் என்ற பொருளையே வழங்குகிறது.

தமிழர் பண்பாட்டின் ஆதாரமான மற்றொரு நூல் திருக்குறள். இதிலும் "இருந்தோம்பி இல் வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு என்று வேளாண்மை பற்றிக் கூறப்படுகிறது.
மீண்டும் இதற்கும் விவசாயம் அல்லது உழவு என்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதாவது விருந்தோம்பி உபசாரம் செய்தலையே வள்ளுவர் குறிப்பிடுவதாக பரிமேலழகர் உரை கூறுகிறது.

ஆனால் வேளிர் மகளிர் அல்லது வேளிர் மாந்தர்கள் என்ற பிரயோகமும் வருவதால் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட ஒரு குலத்தின் பெயரில் எழுந்ததாகவும் கருத இடமுண்டு. உழுதல் என்ற செயலிலிருந்து எழுந்த உழவு, உழவர் என்ற சொற்களை பயன்படுத்துவதே சாலப்பொருத்தம் என்று தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே உழவு என்ற சொல்லும் பயிர்த்தொழில் என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வேளாண்மை என்பதற்கு எந்த ஒரு எதிர்மறை பொருளும் பண்டைய தமிழர் மரபில் இல்லையென்பதால், உழவு செய்து, விருந்து உபசரித்து என்ற இரண்டையுமே தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் சொல்லாகவே கருத இடமுண்டு.சங்கத் தமிழர் காலத்தில் உழவுத் தொழில் அதன் சிறப்பை எட்டியது. சமூகத்தின் தலையாய தேவையாக உழவு சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே உழவரை சமூக படிமுறையில் முதலில் வைத்து பண்டைய இலக்கியங்களில் உயர்வு செய்யப்பட்டுள்ளது.

பண்டைய தமிழர்கள் மண்ணின் பல்வேறு வகைகளை அறிந்தவர்கள். எந்த மண்ணில் எந்த பயிர் செய்ய முடியும் என்று அறிந்து வைத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு பொருத்தமான நீர்ப்பாசன முறைகளை தெளிவுடன் கடைபிடித்து வந்தனர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைப் பாகுபாட்டில், மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடங்களாகும். புலவர்களின் பாடல்களின் படி இந்த நிலப்பகுதியில் உழவுத் தொழிலுடன் கூடிய உயர் நாகரீக பண்பாடு இருந்து வந்துள்ளதை நாம் அறியலாம்.
உழவர்கள் தங்கள் மேல் பூந்தாது படிய காஞ்சி மரக்கிளையை வளைப்பதும், ஒற்றை ஏருடைய உழவன் ஈரம் உண்டான நிலத்தில் விதைக்க விரைவதுமாகிய செய்திகள் குறுந்தொகையில் உள்ள மருத நில பண்பாட்டை வர்ணிக்கும் பாடல்களில் உள்ளது.

அதேபோல் மலையும் மலை சார்ந்த இடமுமாக கூறப்படும் குறுஞ்சி நிலத்தில் தினை, ஐவனம் முதலியவற்றை விதைத்து அருவி நீரால் விளைவிப்பார்கள் என்று இலக்கிய ஆதாரங்கள் கூறுகின்றன. பருப்புக்காக மொச்சையையும், உடைக்காக பருத்தியையும் விளைத்து உண்ண, உடுக்கவென்று தன்னிறைவுடன் வாழ்ந்து வந்துள்ள செய்திகள் பண்டைய தமிழர் பண்பாடு நெடுக நமக்கு காணக்கிடைக்கிறது.

நிலங்களை அதன் வள ஆதாரங்களுக்கேற்ப வன்புலம், மென்புலம், பின்புலம் என்று வகை பிரித்து வைத்திருந்தனர். உப்பு நிலத்தை களர் நிலம் அல்லது உவர் நிலம் என்று தனியாக பிரித்து வைத்திருந்தனர்
நெல், கரும்பு, தானியப் பயிர்கள், மிளகு, தேங்காய், அவரை, பருத்தி, புளி சந்தனம் என்று அனைத்து வகைகளையும் இவர்கள் உற்பத்தி செய்துள்ளனர். நெல்லிலேயே வெண்ணெல், செந்நெல், புதுநெல் என்று வகைபிரித்திருந்தனர். முல்லை நில மக்கள் பழங்களையும், கால் நடைகளுக்கான தானியங்களையும் உற்பத்தி செய்தனர்.

தொண்டி என்னும் ஊரில் வெண்ணெல் விளைந்ததாக சங்கப்பாடல் ஒன்றின் மூலம் தெரியவருகிறது. உள்ளீடில்லாத நெல்லிற்கு பதடி என்றும் பெயரிட்டு வைத்துள்ளனர் பண்டைய உழவர்கள்.உழவின் பெருமை
திருக்குறளில் உழவின் பெருமை உயர்வாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை

என்று உழவை தலையாயது என்றும் முதன்மையானது என்றும் கூறியுள்ளார் வள்ளுவர்.உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்துஎன்றும்,உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்,தொழுதுண்டு பின் செல்வர்

என்றும் கூறியுள்ளார்.புற நானூற்றில் இரண்டு பாடல்களில் மன்னர்கள் போர் செய்யும் போர்க்களத்தை ஏர்களத்துடனும் போர் புரியும் அரசரை உழவருடனும் ஒப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது.

இந்த பாடல் 369 என்று இலக்கமிடப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் பரணர். குருதி விழுந்து சேராகிப் போனா நிலத்திலே அதாவது போர்க்களத்திலே, தேரின் ஓட்டம் ஏராக வர்ணிக்கப்பட்டு, போர் வீரர் சால் பிடித்து வேலும் கணையமும் கொண்டு வித்தி என்று போர்க்களமும் ஏர்க்களமும் ஒன்றெனவும், போரிடும் அரசரை உழவர்க்கு ஒப்பாகவும் பரணர் பாடியுள்ளார்.

கம்பர் "ஏரெழுபது" என்று உழவின் பெருமைகளை வேறு எந்த புலவரும் செய்திடாத அளவிற்கு பரந்து பட்ட விதத்தில் அதன் ஆழமான பொருள் விளங்குமாறு பாடியுள்ளார்.

"உழு குலத்திற் பிறந்தாரே உலகுய்ய பிறந்தாரே" என்று வர்ணிக்கிறார் கம்பர்.

"வேத நூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவாரெல்லோரும் உழுவார் தந்தலைக்கடைக்கே
கோதைவேள் மன்னவர்தம் குடைவளமுங் கொழு வளமே
ஆதலால் இவர் பெருமை யாருரைக்க வல்லாரே"

வேத நூல் தொடங்கி, அனைத்துக் கலைகளையும் கற்றறிந்த கல்வி அறிவு படைத்தவர்களை உழவர்களை ஒப்பிடுகையில் கடை நிலையில் உள்ளவர்களே என்றும் மன்னவர்களின் வளமான ஆட்சியும் உழவர்களின் கொழு வளத்தால் விளைந்தது எனும்போது ஒருவரும் உழவர்களின் பெருமைகளை யாரேனும் இயம்பவும் தேவையோ என்கிறார் கம்பபுற நானூற்றில் போர் புரியும் மன்னர்களை உழவருக்கு ஒப்பாகவும் போர்க்களத்தை ஏர்க்களமாகவும் உருவகித்த சங்க இலக்கிய மரபிற்கு எதிராக மன்னர்தம் பெருமை மட்டுமல்ல வேதம் முதலாக அனைத்து கல்விகளையும் கற்றவர்களும் உழவர்க்கு பின்னேதான் என்று கம்பர் கூறுகிறார்.அடுத்ததாக,

"செழுவான மழைவாரி திங்கடொறும் பொழிந்தாலும்
கெழு நீரா நிலமடந்தை கீழ் நீர்க் கொண்டெழுந்தாலும்
வழுவாத காவேரி வள நாடர் உழு கலப்பைக்
கொழுவாணி கோன்டற்கன்றி குவலயஞ்சீர் நிரம்பாதே"

என்று இயற்கை வளங்களான வானிலிருந்து கீழ் நோக்கி பொழியும் மழையும், நிலத்தடியிலிருந்து மேல் நிலைக்கு நீர் மேலெழும்பி வந்தாலும் உழவர்களின் கலப்பையின்றி களஞ்சியம் நிரம்ப வழியில்லை என்று கூறுகிறார்.

முதலில் கற்றோரை விடவும் உழவை உயர்வாகக் கூறிய கம்பர் அடுத்ததாக இயற்கை வளம் இருந்தாலும் உழவரின் உழப்பின்றி வளம் ஏது? என்று வினவுகிறார்.இன்னொரு பாடலில் 'போர் வேந்தர் நடத்து பெருஞ் செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறு கோலே'என்று மன்னர்களின் செருக்கிற்கு ஒரு இடி கொடுக்கிறார்.

'ஞான மறையவர் வேள்வி நலம் பெறுவதெவராலே...' என்று கேள்வி எழுப்பும் கம்பர் உழும் எருதின் சிறப்பாலே என்று மேலும் மறையோதும் ஞானியருக்கும் ஒரு அடி கொடுக்கிறார்.
உழும் எருதின் சிறப்பை வர்ணிக்கும் கம்பர் மற்றொரு பாடலில் "கண்ணுதலோன் தனது திருக்கண்டத்திற் படிந்த கறை விண்ணவரையமுதூட்டி விளங்குகின்ற கறையென்பர்", அதாவது சிவபெருமான் கண்டத்தில் உள்ள விஷத்தை "கறை" என்று எள்ளும் புலவர், அது வானுலகத்தோருக்கு அமுதூட்டி விளங்கும் கறை என்று கூறுவார்கள் என்று கூறி, பிறகு 'மண்ணவரை அமுதூட்டி வானுலகங்கங் காப்பதுவும், எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருது சுவலிடுங்கறையே' என்று முடிக்கிறார்.

அதாவது சிவனது கண்டமெனும் கறையை வானுலகத் தேவர்களை காக்கும் என்று கூறுகிறார்களே, மண்ணில் இருப்பவர்களை காப்பது உழவு மாட்டின் கழுத்தில் இருக்கும் கறையே என்கிறார். சிவபெருமானின் விஷக் கண்டத்தைக் காட்டிலும் மாணுலகை வாழ வைக்கும் எருதின் கழுத்துக் கறையே சிறப்பானக்டு என்கிறார் கம்பர்.

உழவின் சிறப்பிற்கு முத்தாய்ப்பாக கம்பரின் இந்தப் பாடலை எடுத்தாளலாம்:
அலகிலா மறைவிளங்கும் அந்தணர் ஆகுதி விளங்கும்
பலகலையான் தொகை விளங்கும் பாவலர்தம் பா விளங்கும்
மலர்குலாந்திரு விளங்கும், மழை விளங்கும்,மனுவிளங்கும்
உலகெலாம் ஒளி விளங்கும் உழவருழும் உழவாலே"

என்று வேள்வி முதல் கல்வி வரை, இயற்கை சிறப்பும், அனைத்தும் உழவெனும் உழைப்பின் சிறப்பாலே ஒளிவிளங்குதாகுக என்று உழவின் பெருமையை அனைத்திற்கும் மேலாக வைத்து போற்றுகிறார் கம்பர்.

ஆம், ‘உலகெலாம் ஒளி விளங்கும் உழவருழும் உழவாலே’ என்று சிறப்பெய்திய உழவு என்பது ஒரு தொழில் மட்டுமன்று அது ஒரு பண்பாடு.
உழவுடன் தோன்றிய இசை, பாடல் மரபு, உழவுடன் தோன்றிய வழிபாட்டு மரபு, உழவுடன் தோன்றிய விருந்துபசரிப்பு மரபு என்று உழவைச் சுற்றி ஒரு பண்பாட்டுத் தொகுதி உள்ளது.

இன்றைய நசிவுச் சூழலில் விவசாயம் அழிந்து,உழவர்கள் தற்கொலை செய்து கொள்வது வெறும் அரசியல், பொருளாதாரா, சமூக பிரச்சனை மட்டுமல்ல. இது அழிந்துவரும் பண்பாடு குறித்த பிரச்சனை.

இன்றைய நகரமயமாதல் சூழலில் தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்து ஊடாடி வந்த பண்பாடுகளெல்லாம் வெறும் காட்சிப் பொருளாக மாறி வருவது நசிவுப் பண்பாட்டின் தொடக்கமே. அன்று 'பாதீடு' என்று அழைக்கப்பட்ட பகிர்ந்துண்ணும் மரபில் இருந்த கூட்டாஞ்சோறு போன்ற உணவு வகையெல்லாம் என்று நகர்ப்புற மேனா மினுக்கி விடுதிகளில் "எத்னிக்" என்று பெயரிடப்பட்டு கடுமையான விலையில் விற்கப்படும் நகர்ப்புற நசிவுப் பண்பாடு உருவாகியுள்ளது.

நவீன வாழ்வு அழித்தொழித்த மிகப்பெரிய பண்பாடுகளில் உழவு முதலிடம் வகிக்கிறது என்பதில் நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை.  பொருளாதாரம் 2020ஆம் ஆண்டு 15 சதவீதம் உயரும் என்றும் நாளொரு மேனி பொழுதொரு செய்தியுமாக 'வளர்ச்சி'க் கதை கட்டி உழவை அழித்து வரும் பேரசுகளிடம் நாம் கேட்க வேண்டிய ஒரு கேள்வி யாருடைய வளர்ச்சி? எதன் வளர்ச்சி? என்பதே.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top