கொழும்பில் எலிகளை கட்டுப்படுத்தும் செயன்முறை மந்த நிலையை அடைந்துள்ளமையால் அவை தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாக கொழும்பு மாநகரசபை வைத்தியர் காரியவசம் தெரிவித்தார்.
எலி மருந்துகளாக உபயோகிக்கும்
இரசாயனங்களை காலத்துக்கு காலம் மாற்ற வேண்டியுள்ளதால் அவற்றின் விலையேற்றம் மற்றும் தொழிலாளர் பிரச்சினை ஆகியன காரணமாகவே எலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது மந்தகதியை அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பிற்குள் எலிகள் பெருகுவதற்கான முக்கிய இடமாக கொழும்பு துறைமுகம் கருதப்படுகிறது. துறைமுகம் உள்ளிட்ட புறக்கோட்டை, மருதானையூடான பொரள்ளை வரையான பகுதி எலிகளுக்குரிய பிரதான எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் மூலமாகவே வெவ்வேறு நாடுகளிலிருந்து எலிகள் இங்கு வந்து சேர்கின்றன. துறைமுகத்தில் கப்பலொன்று நங்கூரமிடப்பட்டதும் அதற்குள்ளிருந்து பெரும் எண்ணிக்கையான எலிகள் வெளியேறுகின்றன.
அவற்றுக்கு தேவையான போதியளவு உணவு புறக்கோட்டை சந்தைப் பகுதியில் கிடைப்பதனால் அவை சந்தை மற்றும் ரயில்வே நிலையங்களில் உணவு உட்கொண்டு இனத்தைப் பெருக்கி வருவதுடன் மருதானையூடான பொரள்ளை பிரதேசத்தை நோக்கி பரவிச் செல்வதாகவும் வைத்தியர் காரியவசம் தெரிவித்தார்.
மேலும் இப்பிரதேசங்களை மையமாக கொண்டே எலிகள் கொழும்பின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை நோக்கி நகர்வதனையும் அவர் சுட்டிக்காட்டினார்
எனவே எலிகளை மேற்கூறப்பட்ட அதன் முக்கிய மையப் பகுதிகளில் கட்டுப்படுத்துவதன் மூலம் கொழும்பில் அதன் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க முடியும்.வெளிநாட்டுக் கப்பலொன்று துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டது முதல் இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது பொருத்தமானதாக அமையுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் எலிகள் நாம் உபயோகிக்கும் எலி மருந்துகளுக்கு இயைபாக்கமடைந்து வருவதனால் காலத்துக்கு காலம் அவற்றின் இரசாயனத்தின் செறிவை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிக வேலையேற்றம் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை உணவகங்களில் எலி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் வருடந்தோறும் அவற்றை சுத்திகரித்து எலி பெருகக்கூடிய இடங்களை அகற்றுமாறு மாநகர சபையினால் அறிவுறுத்தல் வழங்குவோம். அத்துடன் மாநகர சபை குறித்த உணவகத்தை சோதனைக்குட்படுத்திய பின்னரே அவற்றுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றதெனவும் வைத்தியர் தெரிவித்தார்.
கடந்த வருடம் எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஏழு பேரே கொழும்பில் அடையாளம் காணப் பட்டிருந்தனர். இவர்களும் கொழும்பு கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களென வைத்தியர் காரியவசம் குறிப்பிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக