புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஏழு வயது சிறுமி ஒருவரின் வயிற்றில் இருந்து கால் கிலோ தலைமுடி அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின், கொருக்குப்பேட்டையை சேர்ந்த, 2ம் வகுப்பு படிக்கும் மாணவியான ஆயிஷா (7), கடந்த 6
மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆயிஷா, அதன்பின், மருத்துவமனை டீன் கீதா லட்சுமி உத்தரவுப்படி குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிறுமியின் வயிற்றை தடவி பார்த்தபோது, வயிற்றில் கட்டி மாதிரி இருப்பது தெரியவந்தது. மேலும், 7 வயதில் 22 கிலோ இருக்க வேண்டிய சிறுமி, 15 கிலோ மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, ஆயிஷாவுக்கு அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் சிறுமியின் இரைப்பையில் பந்து வடிவில் முடி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜே.முத்துக்குமரன் தலைமையில் வைத்தியர்கள் கற்பக விநாயகம், முருகன், பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சிறுமி ஆயிஷாவின் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்து தலைமுடியை எடுத்தனர்.

மேலும், தலைமுடியின் ஒரு பகுதி நீளமாக சிறுகுடல் வரை சென்றிருந்தது. அதனையும், பாதுகாப்பாக வைத்தியர்கள் அகற்றினர்.

இதுகுறித்து குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜே.முத்துக்குமரன் கூறியதாவது...

சிறுமி ஆயிஷாவுக்கு தலையில் உள்ள முடியை சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இது ஒரு விதமான மன அழுத்த நோய். இதற்கு, டிரைக்கோ பசார்’’ என்று பெயர். இந்த நோய் ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகளிடமே அதிகம் காணப்படும். இவர்கள் தலைமுடியை மட்டுமின்றி கண் இமைகளில் உள்ள முடி துணிகளில் உள்ள நூல், சரிகை, நார் என கையில் கிடைப்பதை எல்லாம் வாயில் போட்டுக்கொள்வார்கள்.

ஆயிஷாவின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, இரைப்பையில் இருந்து சுமார் 250 கிராம் பந்து வடிவில் காணப்பட்ட முடி எடுக்கப்பட்டது. அதில், முடி மட்டுமின்றி நூல் மற்றும் நார்களும் இருந்தது.

இதனை, அப்படியே விட்டிருந்தால், சிறுமியின் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும். தற்போது அவள் நலமாக இருக்கிறாள். இன்னும் ஒரு வாரத்தில் வீட்டிற்கு சென்று விடலாம்.

சிறுமி ஆயிஷாவின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட 250 கிராம் முடி, உடற்குறியியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த முடியை வைத்து, இதுபோன்ற பிரச்சினைகளுடன் வரும் குழந்தைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.

குழந்தைகள் மனதளவில் பாதிக்காத சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கி தர வேண்டும். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கை மற்றும் பழக்க வழக்கங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

குறிப்பாக தலையில் முடி குறைகிறதா என்பதை பார்க்க வேண்டும். இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக குழந்தைகள் வைத்தியர்கள் அல்லது குழந்தைகள் அறுவை சிகிச்சை வைத்தியர்களிடம் காண்பிக்க வேண்டும்.

வீட்டில் குழந்தையின் முன்பு, பெற்றோர் சண்டை போடுவது. தந்தை குடித்து விட்டு வீட்டிற்கு வருவது. பள்ளியில் சரியாக பாடங்களை படிக்கவில்லை என்றால், மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது. வீட்டில் குழந்தைகளை எந்த நேரமும் படிபடி என்று தொந்தரவு செய்வது போன்றவற்றால் குழந்தைகள் டென்ஷன் ஆகின்றனர்.

இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, குழந்தைகள் நகத்தை கடிப்பது. தலையை சொறிவது. தலைமுடியை வாயில் போட்டு கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

இந்த தலைமுடி வயிற்றுக்குள் சென்று, இரைப்பையில் தஞ்சம் அடையும். இரைப்பையின் வடிவிலேயே பந்து போன்று உருவாகிவிடும். இரைப்பை முழுவதும் நிரம்பி விட்டால், முடி பந்தின் வால் பகுதி வெளியே வந்து, சிறுகுடல் வரை செல்லும்.

இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். சரியாக பசிக்காது. ஒரு இட்லியை சாப்பிட்டாலே, பசி அடங்கி விடும். இரத்த சோகை ஏற்படும்.

உடலில் புரத சத்து குறையும். மல சிக்கல் மற்றும் வாந்தி ஏற்படும். மேலும், உடல் எடை குறையும் என்று வைத்தியர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top