மன வளர்ச்சி குன்றிய பெண் பிள்ளைகள் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தந்தைக்கு எதிரான வழக்கு
விசாரணையின் ஆவணங்கள்; நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதிவாதியான அந்த மூன்று குழந்தைகளின் தந்தை தொடர்பில் அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்வதற்காகவே அந்த வழக்கின் ஆவணங்கள் நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே வழக்கு விசாரணை ஆவணங்களை நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
அளவெட்டி பெரியவளவு பகுதியில் மூளை வளர்ச்சி குன்றிய தனது 3 பெண் பிள்ளைகளை 1998 ஆம் ஆண்டு யூலை மாதம் 04 ஆம் திகதி கொலை செய்த குற்றச்சாட்டில் பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை விஜயகுமார் என்பவரை அளவெட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இவரின் மூன்று பிள்ளைகளான விஜயகுமார் லோஜினி , விஜயகுமார் தயானி மற்றும் விஜயகுமார் லிங்காதேவி ஆகியோரே கிணற்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.
அத்துடன், மூத்தமகளான விஜயகுமார் லோஜினி (வயது 19) என்பவரின் வயிற்றில் 24 வாரம் கொண்ட ஆண் சிசு இருந்ததாகவும் குறித்த பெண் மூளை வளர்ச்சி குறைபாட்டினை கொண்டுள்ளதாகவும் சட்ட வைத்தியர் ராம் மனோகா 1998 ஆம் ஆண்டு யூலை மாதம் 05 ஆம் திகதி சமர்ப்பித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விஜயகுமார் தயானி (வயது 15) மற்றும் விஜயகுமார் லிங்காதேவி (வயது 17) ஆகிய ஏனைய இரு பிள்ளைகளும் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்துள்ளதாகவும், கிணற்றில் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்படி வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரி சார்பில், உறவினர்கள் இருவர் சாட்சியமளித்துள்ளனர்.
தந்தையான கணபதிப்பிள்ளை விஜயகுமாரின் மைத்துனன் சாட்சியமளிக்கையில்,
மூன்று பிள்ளைகளின் சடலங்களும் மீட்க்கப்பட்ட தினத்தன்று கணபதிப்பிள்ளை விஜயகுமார் நஞ்சு அருந்திய நிலையில் வீட்டில் படுத்திருந்ததாகவும், இவர்களின் குடும்பத்தில் பரம்பரையாக ஆண்கள் மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் பிரதிவாதியான மூன்று பிள்ளைகளின் தந்தை சித்த சுவாதீனமுற்றவர் என்பது வைத்தியசான்றுகள் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ள காரணத்தினால், குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை பிரிவு 381க்கு அமைவாக பிரதிவாதி தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக வழக்கின் ஆவணங்களை நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
நீதியமைச்சரின் அறுவுறுத்தல்கள் கிடைக்கும் வரை பிரதிவாதியை விளக்கமறியலில் வைக்குமாறும் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.