நீண்ட இடைவேளைக்குப் பின்பு தெனாலிராமன் படத்தில் நடிக்கும் வடிவேலு, அப்படத்திற்கு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
கடந்த இரண்டு வருடமாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு, புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார், தெனாலிராமன் கதையில் நடிக்கிறார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என பல தகவல்கள் வெளியாகின.
ஆனால் வடிவேலுவை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை. இதற்கிடையே இம்சை அரசன் புலிகேசி பாகம் 2-ல் வடிவேலு நடிக்க இருந்த நிலையில், கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு இயக்குனர் சிம்புதேவன் உடன்படவில்லை. அதனால் அப்படத்திலிருந்து விலகினார் சிம்புதேவன்.
இந்நிலையில் வடிவேலு போட்டா போட்டி படத்தை இயக்கிய யுவராஜ் இயக்கும் கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தில் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்பு இமான் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த தகவலை இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.
இதுவரை 31 பாடல்கள் பாடிய வடிவேலு, கடைசியாக 12 வருடத்திற்கு முன்பு என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.