இந்தியா-சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக இலங்கைத் தமிழரான சுந்தரேசன் என்பவர் தனது தாயுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார்.
சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42வது தெருவில் குடியிருக்கும் அவர், டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வந்தார். அவரது மனைவி சித்ரா (45). அவர்களுக்கு சமீரா(12) என்ற மகள் இருந்தார்.
இந்நிலையில் லாபத்தில் சென்ற டிராவல்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் ஓடியது. இதனால் விரக்தி அடைந்த சுந்தரேசன் மது அருந்த ஆரம்பித்தார். அவரது குடிப்பழக்கத்தால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
டிராவல்ஸ் நிறுவனம் சரியாக நடக்காததால் சுந்தரேசன் சிலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியுள்ளார். அவர் கடனை திருப்பிக் கொடுக்காததால் பணத்தை கொடுத்தவர்கள் அதை திருப்பிக் கேட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு சென்ற சுந்தரேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து அவர் ஒரு அறையிலும், அவரது தாய், மனைவி மற்றும் மகள் ஆகியோர் பக்கத்து அறையிலும் தூங்கியுள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு எழுந்த சுந்தரேசன் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் குடும்பத்தாரை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது தாய், மனைவி மற்றும் மகள் ஆகியோரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதிக்கு சென்றார். அவர் பரங்கிமலை, பழவந்தாங்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலின் முன்பு அவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது சுந்தரேசனின் செல்போன் சேதமடையாமல் இருந்ததை பார்த்த பொலிஸார் அதை வைத்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உடல் சிதறி இறந்தவர் டிராவல்ஸ் அதிபர் சுந்தரேசன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, தாம்பரம் ரயில்வே பொலிஸார் சுந்தரேசனின் வீட்டுக்கு சென்றபோது அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் 3 பிணங்கள் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து ஆதம்பாக்கம் பொலிஸாசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் சுந்தரேசன் தன் குடும்பத்தாரை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து, வீட்டில் கிடந்த 3 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் மற்றும் ஆதம்பாக்கம் பொலிஸார் தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.