இன்று மே 12. இந்த நாள் உலகெங்கிலும் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பெற்ற மகனை பேரம் பேசி விற்றுவிட்டு கடத்திச் சென்றதாக சென்னையை
சேர்ந்த ஒரு பெண் போலீசில் பொய் புகார் அளித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் அரசு பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கமலாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
அதில் ஒரு குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருந்ததால் வைத்திய செலவுகளை சமாளிக்க முடியாமல் கமலா சிரமப்பட்டார். அவரது நிலைமையை கண்ட கமலாவின் அத்தை, ஒரு குழந்தையை யாருக்காவது விற்றுவிடலாம் என்று ஆலோசனை கூறினார். கமலாவும் அதற்கு சம்மதித்தார்.
அதே பகுதியில் வசிக்கும் முபாரக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு வரிசையாக 3 பெண் குழந்தைகள் உள்ளன. தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த முபாராக்குக்கு வலைவிரித்த கமலாவின் அத்தை, அவரிடம் ஒரு ஆண் குழந்தையை விற்றுவிட ரூ.60 ஆயிரத்துக்கு பேரம் பேசினார்.
முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்தை தந்த முபாரக், குழந்தையை வாங்கிக் கொண்டார். மீதி பணத்தை 10 நாட்களுக்குள் தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஆனால், 20 நாட்களுக்கு மேல் ஆகியும் உறுதியளித்தபடி முபாரக் பணத்தை தராததால், கணவருடன் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கமலா, தனது குழந்தையை முபாரக் கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார்.
போலீசார் முபாராக்கிடம் விசாரித்த போது, நடந்த சம்பவம் அனைத்தையும் கூறிய அவர், நாங்கள் குழந்தையுடன் இவ்வளவு நாள் பாசமாக இருந்துவிட்டோம். எங்களிடம் இருந்து அவனை பிரித்து விடாதீர்கள் என்று போலீசாரிடம் கெஞ்சினார்.
எனினும், சட்டப்படி குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், கமலாவின் கணவர் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக