கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் சென்ற ஓய்வு பெற்ற எஸ்ஐ மனைவியை கடத்தி, வாயில் துணியால் கட்டி கழுத்தை நெரித்து கொலை
செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த மணலி அருகே உள்ள மாத்தூர் சி.எம்.டி.ஏ காலனியில் வசித்து வருபவர் சதாசிவம் (வயது 60). கொருக்குபேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மல்லிகா (50). இவர்களுக்கு கவிதா என்ற மகளும், சரவணன் (27) சக்திவேல் (25) என 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வேலூர் மாவட்டம், பெண்ணாத்தூர் காவேரிபாக்கத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மல்லிகாவும், அவரது தங்கை தமிழ்ச்செல்வி என்பவரும் சென்றிருந்தனர். திருமணம் முடிந்தவுடன் இருவரும் கோயம்பேட்டிற்கு பஸ்சில் இரவு 10.30 மணிக்கு வந்து இறங்கினர். தமிழ்ச்செல்வி பஸ்சில் முகப்பேரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மல்லிகா மட்டும் தனியாக கோயம்பேட்டில் இருந்து மாத்தூர் வருவதற்காக ஆட்டோ ஒன்றில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கழுத்தில் 15 சவரன் தங்க நகை அணிந்திருந்தார். ஆட்டோவில் மல்லிகா வரும்போது, தன்னுடைய மகனுக்கு போன் செய்து, தான் ரெட்டைஏரி அருகே வந்துவிட்டதாகவும் விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், சிறிதுநேரத்தில் அவரது போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சதாசிவம் மற்றும் அவரது மகன்கள், மல்லிகாவை இரவு முழுவதும் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் சதாசிவம் புகார் செய்தார்.
இந்தநிலையில் செங்குன்றம் அருகே வடப்பெரும்பாக்கத்தில் பெண் ஒருவரின் பிணம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆபிரகாம்குருஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மாதவரம் பால்பண்ணை போலீசார் மல்லிகா என்ற பெண்ணை காணவில்லை என்று செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே, சதாசிவம் மற்றும் அவரது மகன்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் மல்லிகா என்று அடையாளம் காட்டினர். இதனையடுத்து, மல்லிகாவின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோயம்பேட்டில் இருந்து தனியாக வந்த மல்லிகாவை, மர்மமனிதர்கள் ஆட்டோவில் கடத்திச்சென்று செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் வெஜிடேரியன் நகர் செல்லும் சாலையில், வைத்து அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி கொலை செய்ததாகவும், அவர் அணிந்திருந்த தங்கநகைகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே, ஆட்டோ டிரைவர் ஒருவர் தான் இந்த கொலையை செய்திருக்க முடியும் என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.
குற்றவாளியை பிடிக்க துணை கமிஷனர் புகழேந்தி, உதவி கமிஷனர் கந்தசாமி ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மர்மமனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக