இளம் கதாநாயகர்களில் நடிப்பில் சிறந்தவர் சிலம்பரசனா, ஜீவாவா? என்ற கேள்விக்கு, டைரக்டர் கவுதம் வாசுதேவ்மேனன் பதில் அளித்தார்.மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’,
‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நடுநிசி நாய்கள்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த கவுதம் வாசுதேவ்மேனன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கவுதம் வாசுதேவ் மேனன் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இளம் கதாநாயகர்கள் சிலம்பரசன், ஜீவா ஆகிய இரண்டு பேரும் உங்கள் டைரக்ஷனில் நடித்து இருக்கிறார்கள். இரண்டு பேரில் நடிப்பில் சிறந்தவர் யார்?
பதில்:- இரண்டு பேருக்கும் வித்தியாசம் கிடையாது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிலம்பரசன், நான் என்ன சொன்னேனோ அதை செய்தார். அவருக்குள் ஒரு நல்ல நடிகர் இருப்பதை தெரிந்துகொண்டேன். ஜீவா நடித்த ‘ராம்’, ‘கற்றது தமிழ்’, ‘சிவா மனசுல சக்தி‘, ‘கோ’ ஆகிய படங்களை பார்த்து இருக்கிறேன். அந்த படங்களை பார்த்துவிட்டுத்தான் ஜீவாவை ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துக்கு ஒப்பந்தம் செய்தேன். படப்பிடிப்பின் போது, நான் என்ன எதிர்பார்த்தேனோ, அது ஜீவாவிடம் இருந்து ஒரே டேக்கில் வந்தது. இரண்டு பேரில் யார் சிறந்த நடிகர்? என்ற சர்ச்சைக்குள் நான் வர விரும்பவில்லை.
கேள்வி:- ஹாரீஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசையில் தொடர்ந்து படங்களை டைரக்டு செய்து வந்த நீங்கள், ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துக்கு இளையராஜாவிடம் சென்றது ஏன்?
பதில்:- இசையை பொருத்தவரை, நான் சின்ன வயதிலேயே இளையராஜாவின் ரசிகர். அவர் பாடல்களை கல்லூரியில் பாடி பரிசு வாங்கியவன். ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துக்கு அவர் தேவைப்பட்டார். படம் பார்த்தாலே உங்களுக்கு புரியும்.
கேள்வி:- உங்கள் அடுத்த படத்தின் கதாநாயகன் யார்?
பதில்:- சூர்யா. அடுத்து அவரை வைத்து தான் டைரக்டு செய்கிறேன். அது, என் சொந்த படம். சர்வதேச பிரச்சினையை கருவாக கொண்ட கதை. பெரும்பகுதி படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு கவுதம் வாசுதேவ் மேனன் கூறினார்.
பேட்டியின் போது நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் இளையராஜா, பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், பட அதிபர்கள் எல்ரெட் குமார், ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக