இங்கிலாந்தில் வசிக்கும் ஓர் பெண் விடுமுறையை கழிக்க தனது 2 வயது மகனுடன் ஆக்ஸ்போர்ட் நகரின் இஃப்லி பகுதியில் உள்ள த ட்ரீ ஓட்டலின் ‘பப்’ பிற்கு வந்திருந்தார்.
தாய் அசந்த நேரத்தில் அங்கே சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஏணியில் விறுவிறுவென ஏறிய சிறுவன் கூரை மீது சென்றதும் கீழே குனிந்துப் பார்த்து பயத்தில் சத்தம் போட்டு அழத் தொடங்கினான்.
மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கும்படி பப் ஊழியரிடம் கூறிய சிறுவனின் தாயார், அவனை அப்படியே அமர்ந்திருக்கும்படி கத்தினார்.
அவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்த சிறுவன், தாயாரின் குரலைக் கேட்டதும் எழுந்து நிற்க முயன்றான். சரிவான கூரையில் எழுந்து நிற்க முடியாமல் மகன் தடுமாறுவதை கண்ட அந்த பெண் வாய்விட்டு கதறத் தொடங்கினார்.
அனைவரும் செய்வதறியாது கையை பிசைந்துக் கொண்டிருந்த வேளையில், அந்த கட்டிடத்தின் மழைநீர் வடிகால் குழாயை பிடித்தபடி மளமளவென்று மேலே ஏறிய ஒருவர் சிறுவனை பாதுகாப்பாக அணைத்துக் கொண்டார்.
15 நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் சிறுவனையும், அவனை காப்பாற்றிய பிரெஸ்டன் லைக்லி (42) யையும் மின்சார ஏணியின் மூலம் கீழே இறக்கினர்.
மகனை வாங்கி முத்தமழை பொழிந்த தாய், துணிச்சலுடன் சென்று சிறுவனை காப்பாற்றிய பிரெஸ்டன் லைக்லிக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்
0 கருத்து:
கருத்துரையிடுக