சீனாவின் செஜியாஸ் மாகாணத்தில் ஜின்ஹுவா நகரம் புஜியாங் பகுதியில் உள்ள குடியிருப்பில் கழிவறை குழாயில் சிக்கித் தவித்த பச்சிளம் குழந்தையை கடந்த சனிக்கிழமை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் லூயிஸ்வில்லி மருத்துவமனையில் வைத்து பராமரிக்கப்படும் அந்த ஆண் குழந்தைக்கு 'பேபி நம்பர் - 29' என்று பெயரிடப்பட்டுள்ளது.
கழிவறை குழாயில் உயிருக்கு போராடிய பச்சிளம் தளிர் மீட்கப்பட்ட செய்தி உலகெங்கும் உள்ள ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் உலா வரும் வேளையில் குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் மும்முரமாக ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக, இச்சம்பவம் பற்றி தகவல் தந்த பெண்ணிடம் இருந்து விசாரணையை தொடங்க விரும்பிய பொலிசார், அவரை விசாரித்த போது முன்னுக்கு பின்னாக தகவல்களை அந்த பெண் கூறினார்.
அவர் மீது சந்தேகப்பட்டு வீட்டை சோதனையிட்ட போது சில பொம்மைகளும், ரத்தக்கறை படிந்த 'டாய்லட் பேப்பர்'களும் சிதறிக் கிடந்தன.
உறவினர்களின் துணை ஏதுமின்றி அந்த வீட்டில் தனியாக வசித்த அந்த 22 வயது பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உனக்கும், குழந்தைக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய நேரிடும் என்று மிரட்டியுள்ளனர்.
மேலும் உரிய முறையில் விசாரித்த போது பொலிசார் எதிர்பார்த்த உண்மை வெளிப்பட்டது. இதில் காதலனுடனான நெருக்கத்தால் கருத்தரித்த அந்த பெண், கருக்கலைப்பை பற்றி ஆலோசிப்பதிலேயே மாதங்களை கடத்தி வந்துள்ளார்.
கலைத்து விடலாம் என்று முடிவெடுத்த போது காலம் கடந்து விட்டதால் கரு முழுமையாக உரு பெற்றிருந்தது. இனி கருக்கலைப்பு சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்த அவர், வீட்டுக்குள்ளேயே பத்து மாதங்களை கழித்துள்ளார்.
பிரசவ வலி ஏற்பட்டதும் கழிவறைக்குள் சென்று தனக்குத்தானே பிரசவம் பார்த்த அவருக்கு கடந்த சனிக்கிழமை பிற்பகலில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அதன் பின்னர், அந்த குழந்தை கழிவறை பீங்கானில் வழுக்கி விழுந்து சிக்கிக் கொண்டதாகவும், காப்பாற்ற முயன்றும் பலனின்றி கழிவறை குழாய் 'எல்' வளைவில் சிக்கிக் கொண்டதால் தீயணைப்பு படைக்கு வெளிநபர் போல் புகார் அளித்ததாகவும் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அந்த பெண் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த சீன மூதாட்டி ஒருவர் 'கழிவறை கால்வாயின் அசுத்தத்தை விட இந்த சிசுவை கொல்லத் துணிந்த தாயின் மனம் மிகவும் அசுத்தம் நிறைந்ததாக இருந்திருக்கும்' என்று வேதனையுடன் கூறியிருந்தார்.
அவரது மன அழகை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் யாருக்கும் இல்லை என்ற போதிலும் முக அமைப்பையாவது தெரிந்துக் கொள்ளலாம் என்ற முயன்ற போதிலும் அந்த கன்னித்தாயின் புகைப்படத்தை வெளியிட சீன பொலிசார் மறுத்து விட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக