இத்தாலியில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு உணவளிக்கச் சென்ற 72 வயது முதியவரை 3 புலிகள் கடித்துக் கொன்றன. இத்தாலியின் வடக்கே உள்ள மலைப் பகுதியில் பினெரோலோ வனவிலங்கு காப்பகம் இயங்கி வந்தது. பொருளாதார நெருக்கடியால் இந்த காப்பகம் கடந்த 2009ம் ஆண்டு மூடப்பட்டது.
எனினும், காப்பகத்தில் இருந்த புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் அதே இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இங்குள்ள புலிகள் குட்டிகளை ஈன்று பல்கிப் பெருகியுள்ளன.
இந்நிலையில், இந்த காப்பகத்தில் பணியாற்றும் 72 வயது நபர் புலியின் கூண்டை திறந்து நேற்று உணவு போட்டார். எதிர்பாராத வேளையில் கூண்டிலிருந்த 3 புலிகள் அவர் மீது பாய்ந்து தொண்டையை கடித்து குதறின.
வலியின் வேதனையால் அந்த முதியவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தார்.
விரைந்து வந்த மீட்புப் படையினர் அந்த முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.