புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவின் தர்மபுரியில் கலவரம் வெடிக்கக் காரணமான காதல் ஜோடியில் இளவரசனின் சடலம் நேற்று ரயில் தண்டவாளத்தில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரின் மகள் திவ்யா. அவர் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடினார்.

இதையடுத்து பெரும் வன்முறை வெடித்தது. 3 கிராமங்கள் ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்டன. இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி திவ்யா நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா இளவரசனுடன் இனி வாழப் போவதில்லை என்றும் அம்மா முடிவுப்படி தான் நடக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இதனால் இளவரசன் மனமுடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மூளை சிதறிய நிலையில் உடல் கிடந்தது. தண்டவாளம் அருகே இருந்த அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பையை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இளவரசனின் சட்டைப்பையில் 2 கடிதங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Top