யாழ். ஊர்காவற்துறை சரவணை பகுதியில் கழுத்து வெட்டி கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்படி வழக்கு யாழ். மேல் நீதிமன்ற
ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சுப்பிரமணியம் தர்மராசா என்பவர் குற்றவாளி என்பதனை உறுதி செய்த ஆணையாளர் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையும் உறுதி செய்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2006 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி ஊர்காவற்துறை சரவணை பகுதியில் சதாசிவம் தயாபரன், சுப்பிரமணியம் தர்மராசா, பரராஜசிங்கம் கிருபாகரன், குமாரவேல் சுதாகரன் ஆகியோர் கள்ளுத் தவறணை ஒன்றில் கள்ளு குடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, சதாசிவம் தயாபரனுக்கும், சுப்பிரமணியம் தர்மராசாவுக்கும் இடையில் பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்போது, சுப்பிரமணியம் தர்மராசா தனது வேட்டியை கிழித்து சதாசிவம் தயாபரனை மின் கம்பத்தில் கட்டி விட்டு பெரிய வாளினால் கழுத்தை வெட்டி கொலை செய்ததுடன், கழுத்தினை சரவணை சந்தியில் போட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார்.
இச்சம்பவத்தின் போது, சம்பவ இடத்தில் இருந்த பரராஜசிங்கம் கிருபாகரன், குமாரவேல் சுதாகரன் ஆகியோர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த கொலை தொடர்பில் 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 06 ஆம் திகதி சட்டமா அதிபரினால் யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இக்கொலையின் பிரதான நபரான சுப்பிரமணியம் தர்மராசா தலைமறைவாகியிருந்த நிலையில், மேற்படி வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்றுவந்தது.
இதன்போது, இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிவாதிகளான பரராஜசிங்கம் கிருபாகரன், குமாரவேல் சுதாகரன் ஆகிய இருவரும் மன்றில் சாட்சியமளித்தனர். இச்சாட்சியத்தின் பிரகாரம், 12.03.2012 சுப்பிரமணியம் தர்மராசா குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதன் பின்னர் தலைமறைவாகியிருந்த நபருக்கு எதிராக நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது இந் நிலையில், ஊர்காவற்துறை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டு யாழ். மேல் நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்திய போதே ஆணையாளர் சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்டதுடன் மரண தண்டனை தீர்ப்பையும் உறுதி செய்துள்ளார்.