நாட்டில் திருமண வாழ்க்கை வாழும் 61% பெண்கள் மகிழ்ச்சியாக இல்லை
இலங்கையில் திருமணம் முடித்த பெண்களில் 61 சதவீதமானவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழவில்லை என கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
திருமணம் முடித்த 39 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை வாழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பிரிவு பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்களின் திருமண வயது 20 தொடக்கம் 30 ஆகும். 36 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியுடன் இந்த வயதெல்லையில் திருமணம் முடித்துக் கொள்வதாகவும் அவர்களில் 33 சதவீதமான பெண்களுக்கு இரு குழந்தைகள் வீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து வேறுபாட்டினால் திருமணம் முடித்த 45 சதவீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கணவனின் குடி பழக்கம், பாலியல் தொந்தரவு, மாமியார் சண்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அழுத்தம் என்பன விவாகரத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
விவாகரத்து பெற்ற பெண்களில் 64 சதவீதமானவர்கள் தொழில் புரிவதாக பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான 58 சதவீத விவாகரத்து பதிவாகியுள்ளதென அவர் கூறினார்.
விவாகரத்து பெற்றவர்களில் 58 சதவீதமான பெண்கள் காதல் தொடர்பில் திருமணம் முடித்தவர்கள் எனவும் ஒன்று தொடக்கம் மூன்று வருட காலத்திற்குள் இவர்கள் விவாகரத்து பெற்றுள்ளதாகவும் பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி தெரிவித்தார்.
சிறிய கால காதல் தொடர்பை பேணி திருமணம் முடித்த பெண்கள் அதிகம் விவாகரத்து பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, விவாகரத்து பெற்ற பெண்களில் 59 சதவீதமானவர்கள் மகிழ்ச்சியற்று வாழ்வதாக பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக