பிரிட்டனில் புற்றுநோயை கண்டறிவதற்கு எளிய மூச்சு பரிசோதனை அறிமுகம்
மனித உடம்பை அரித்துக் கொல்லும் கொடிய நோயான புற்றுநோய் முற்றிய பின்னரே கண்டறியக் கூடியதாக உள்ளது.
அதிலும், வயிற்றுப் பகுதியில் தோன்றும் புற்று நோய் நீண்ட நாட்கள் சென்ற நிலையிலேயே வெளித்தெரிவதால் நோயாளிகள் உயிர் பிழைப்பது மிகவும் கடினமாகிறது.
பிரிட்டனில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 7000 பேர் இந்த வயிற்று புற்று நோய் தாக்கத்திற்கு ஆளாகி அதில் பெரும்பாலோருக்கு நோய் முற்றிய நிலையிலேயே தெரிய வருகிறது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த வகை புற்றுநோயாளிகளில் சிகிச்சைக்குப் பின்னர் ஐந்தில் ஒருவர்தான் ஐந்து வருடங்கள் உயிர் வாழ்கிறார். இருவர் ஒரு வருடம் மட்டுமே வாழ்கின்றனர்.
வயிற்றுக்குள் செலுத்தப்படும் நுட்பமான கமெராவினால் வயிற்றுத் திசுக்களை பரிசோதிப்பதே இந்த புற்று நோயை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய நடைமுறை.
ஆனால், தற்போது மூச்சுக்காற்றைப் பரிசோதிப்பதன் மூலம் இவ்வகை புற்றுநோயை எளிதாக கண்டறியலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியிடும் மூச்சுக்காற்றின் ரசாயன மாறுபாடுகள் மற்ற வயிற்று உபாதைகளிலிருந்து மாறுபடும். தகுந்த மருத்துவ உபகரணங்களால் இதனைக் கண்டறியலாம் என்றனர்.
இஸ்ரேலிலும், சீனாவிலும் விஞ்ஞானிகள் 130 நோயாளிகளை இந்த புதிய முறையில் பரிசோதித்துப் பார்த்ததில் 90 சதவிகித முடிவுகள் சரியாக அமைந்தன.
இது குறித்து இஸ்ரேலின் தொழில்நுட்பப் பேராசிரியர் ஹோசம் ஹைக் கூறுகையில், நீண்ட ஆராய்ச்சிகள் தேவைப்பட்டாலும் இது ஒரு நல்ல பலனைத்தரும் முறை என்றார்.
பிரிட்டனில் புற்று நோய் குறித்த பத்திரிக்கை இதழும், இம்முறை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் நோய் குறித்த பரிசோதனையை விரைவுபடுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பிரிட்டனின் மருத்துவ ஆராய்ச்சிக் கழக தலைவர் கேட்லா கூறுகையில், நீண்ட கால சோதனைகள் தேவைப்பட்டாலும், தற்போதைய கண்டுபிடிப்புகள் நம்பிக்கை அளிக்கின்றன.
நோயின் தாக்கம் நாட்பட்ட பின்னரே வெளித்தெரிவதால் ஐந்தில் ஒருவர் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது என்றும் ஆரம்பகட்டத்தில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நோயாளிகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக