புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறை ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் பொதுமக்கள் போராடத் தொடங்கியுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 15-ஆம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். பின்னர் கடந்த 17-ஆம் தேதி, அந்த சிறுமியின் வீட்டிற்கு கீழ் இருந்த மற்றொரு வீட்டில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலின் பல பாகங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசில் புகார் கொடுத்த பெற்றோர்கள், சிறுமியை சிகிச்சைக்காக தயானந்த் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 
சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததை அடுத்து சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் சிறுமியை சீரழித்த குற்றவாளி மனோஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை சம்பவத்தில் உரிய நேரத்தில் கடமையை செய்யத் தவறிய டெல்லி போலீஸ் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் டெல்லி போலீஸ் தலைமையகத்தின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனையடுத்து, டெல்லியில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 வயது சிறுமி காட்டுமிராண்டித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் விடுத்துள்ள அறிக்கையில், 5 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிகரமானதும், அவமானகரமானதும் ஆகும். இதைப் போன்ற கொடுமைகளை நம்மிடையிலிருந்து களைய ஒன்றுபட்ட சமுதாயமாக நாம் உழைக்க வேண்டும்,என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடத்தப்பட்ட பிறகு கடுமையான தண்டனை வழங்கப்படும்,என்று கூறினார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை இன்று காலை நேரில் சென்று சந்தித்த மத்திய சுகாதாரத்துறை ஆசாத் குலாம் நபி ஆசாத், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும் மருத்துமனைக்குச் சென்று சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுக்க வேண்டும். பின்னர் தூக்கில் போடவேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அனைத்து தரப்பினரிடையேயும் கொதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து கூறியுள்ள சுஷ்மா சுவாராஜ் கூறியுள்ளதாவது: சிறுமியை இரண்டு தினங்கள் அடைத்து வைத்து சீரழித்தவன் மனரீதியாக பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம். எனவே அவனுக்கு முதலில் ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்து சித்ரவதை செய்யவேண்டும். பின்னர் துடிக்கத் துடிக்க தூக்கில் போடவேண்டும். அப்போது தான் இதைப் பார்ப்பவர்களுக்கும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் அச்சம் உண்டாகும் என்றார்.

சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.இந்த துயர சம்பவத்தின் பாதிப்பில் இருந்து சிறுமி விரைவில் குணமடைய, அவரின் பெற்றோருடன் இணைந்து இறைவனிடம் தாம் பிரார்த்தனை செய்வதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.இந்த மாதிரியான வன்புணர்ச்சி சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த சமூகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ள பிரணப் முகர்ஜி, குற்றவாளிகளுக்கு பாடம் புகட்டும்படி கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாதிரியான குற்றங்களை நம் சமுதாயம் ஒற்றுமையுடன் இணைந்து களைய வேண்டும் என்றும் குடியரசு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவன் விலங்கை விட கேவலமானவன் என்று பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கூறியுள்ளார். டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறாள். இந்த சம்பவம் பற்றி அமிதாப் பச்சன் இன்று தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது:மிகக் கொடூரமான சம்பவம் இது. 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் விலங்கை விட கேவலமானவன். இரண்டு நாட்களாக குழந்தையை காணமல் பெற்றோர்கள் தவித்த நிலையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீஸ் இருந்துள்ளது.நமது சமூகத்தில் என்ன நடக்கிறது? ஏன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றங்களுக்கு மக்கள் மன்றத்தில் நீதி வழங்கவேண்டும். குற்றவாளிகளை ஜெயிலில் போடுவது மட்டும் போதாது. அதைவிட கொடூரமான தண்டனைக்கு ஏற்றவர்கள் இவர்கள்.பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது தீவிரவாதத்தை விட கொடுமையானது என்றும் அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top