இந்தியா-சுரண்டை அருகே கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தை சேர்ந்த சாக்கு வியாபாரி செல்வன்.
இவரது மகள் விஜய பிரியா (21). குற்றாலத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு மாணவி. தினமும் தனியார் வேனில் கல்லூரி சென்று வந்தார். இவரும், கடையம் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்த சதீசும் (25) 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். சதிஷ், தென்காசியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியர்.
இந்நிலையில், காதலின் அடையாளமாக சதீஷ் விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி விஜய பிரியாவுக்கு பரிசளித்தார். மகளிடம் செல்போன் இருப்பதை கவனித்த செல்வனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அது குறித்து கேட்டபோது தோழி வாங்கி கொடுத்தது என விஜயபிரியா சமாளித்தார். ஒரு நாள் விஜயபிரியா வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த அவரது போனை எடுத்து பேசினார் செல்வன்.
எதிர்முனையில் சதீஷ் பேசினார். காதல் விவகாரம் செல்வனுக்கு தெரிய வந்தது. மகளை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் சதீஷ் தனது நண்பர்கள் 3 பேருடன் பைக்கில் பரங்குன்றாபுரம் வந்து பெற்றோருக்கு தெரியாமல் விஜய பிரியாவை அழைத்து சென்று விட்டார்.
நேற்று சுரண்டை போலீசில் செல்வன் புகார் செய்தார். இதற்கிடையில், சதீசுக்கு ஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன்பு திருமணமான விஷயம் தெரியவந்துள்ளது.
கணவரை காணவில்லை என அவரது மனைவி சுதா (23) என்பவர் நேற்று கடையம் போலீசில் புகார் கூற வந்த போதுதான் இந்த குட்டு அம்பலமானது.
சுதா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். விஜய பிரியாவை காதலிப்பதை மறைத்து சுதாவை சதீஷ் திருமணம் செய்துள்ளார். காதலியுடன் தப்பிய சதீசை போலீசார் தேடி வருகின்றனர்.