இந்தியா-மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
வயிற்றில் இருந்த விஷத்தை ‘எனிமா’ தந்து வெளியேற்ற முயன்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். விஷம் வெளியேற்றப்பட வேண்டிய உறுப்பில் கனமான இரும்பு ‘பூட்டு’ மாட்டி பூட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, அந்த பெண்ணிடம் டாக்டர்கள் விசாரித்தபோது அவர், “16 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் என்னிடம் அன்பாக நடந்து வந்த என் கணவர், நாளடைவில் என் நடத்தையில் சந்தேகப்படத் தொடங்கினார்.
கடந்த 2008-ம் ஆண்டு ஒரு டாக்டரிடம் என்னை அழைத்துச் சென்ற அவர், எனது இடுப்புப் பகுதியில் ஓர் ஆபரேஷனை செய்து கடினமான இரும்பு பூட்டை மாட்டி விட்டார். அந்த பூட்டின் சாவியை வெளியே போகும்போது எடுத்துச் சென்றுவிடுவார். இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட நான் மிகவும் சிரமப்பட்டேன். பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக இந்த கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டு நரகத்தில் வாழ்வதுபோல் வாழ்ந்து வந்தேன்.
ஆனால், எனது கணவர் இந்த கொடுமைகளையும் தாண்டி, பெற்ற மகளையே கற்பழிக்க முயற்சித்தார். எனவே, இனியும் இந்த நரகத்தில் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவெடுத்து விஷத்தை குடித்துவிட்டேன்” என்று தனது சோகக் கதையை டாக்டர்களிடம் கூறினார்.
பின்னர், அந்த பெண்ணின் இடுப்பில் மாட்டப்பட்டிருந்த பூட்டை அகற்றிய டாக்டர்கள், அவளுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, மனைவியின் இடுப்பில் பூட்டு மாட்டி, அவரை மிருகம் போல் நடத்திய சோகன்லால் சவுகான்(45) என்பவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது இந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனைவி மீது சந்தேகப்பட்டு அவன் தயாரித்து பொருத்தியிருந்த பூட்டின் சாவியையும் அவனிடமிருந்து போலீசார் கைப்பற்றினர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கிரிமினல் குற்றப்பரிவு 326 (மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயம் விளைவித்தல்), 498-ஏ (திருமணமான பெண்ணை கொடுமைப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் குற்றவாளி சோகன்லால் சவுகானுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் சிறப்பு நீதிபதி ஏ.கே.சிங் உத்தரவிட்டார்.