புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார்..ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் இது தொடர்பில் உரிய விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்தார்.

 இந்தச் சம்பவத்தில் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜயரட்ணம் நிர்மலாதேவி (வயது 37) என்பவரே உயிரிழந்தார். இவர் பெண் குழந்தை ஒன்றின் தாயாவார்.

 இருதயநோய் காரணமாக நிர்மலாதேவி மாதாந்தம் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று ஊசி ஏற்றி வருகிறார். அவ்வாறே நேற்றுமுன்தினமும் ஊசி போடுவதற்காக முற்பகல் 10.45 மணிக்கு அங்கு சென்றுள்ளார்.

அங்கு ஊசி ஏற்றப்பட்ட பின்னர் முற்பகல் 11.15 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது..இது தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரியிருந்தார். பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 இந்தப் பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,.1998 ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு இருதய நோய் இருந்துள்ளது.

 ஊசி ஏற்றப்பட்டு அரை மணித்தியாலயத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். மருத்துவத் தவறு காரணமாக அவர் உயிரிழந்தாரா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்குப் போடப்பட்ட ஊசி மருந்து போன்று நேற்று முன்தினம் 33 பேருக்கு அதேவகை ஊசி ஏற்றப்பட்டது.

 அவருக்குச் சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பலமுறை கிளினிக்கொப்பியில் எழுதியுள்ளனர். அவரின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கப்படும் என்றார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top