வெள்ளவத்தை தமிழர்கள் பெருமளவாக வாழும் பகுதி. அங்கு அழகிய கரையோரங்கள் அப்பகுதி மக்களை ஆசுவாசப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
எனினும் காதல் என்ற பெயரில் இளைஞர்கள் புரியும் அட்டகாசத்தினால் கரையோரங்களுக்கு நிம்மதியாக பொழுதைக் கழிக்க வரும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகிறார்கள்.
ஆம்! கரையோரமாக வளர்ந்துள்ள தாழை மரங்களுக்கிடையே தான் அரங்கேறுகிறது அசிங்கமான காதல். திறந்த வெளியில் தாம் நினைத்ததைப் போல நடந்துகொள்ளும் காதலர்களின் நடத்தை காண்போரை தலைகுனிய வைக்கிறது.
நாம் இந்தக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றபோது அன்னாசி விற்கும் வியாபாரியொருவர் கூறிய தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. சமூகத்தின் மிக மோசமான மறுபக்கம் என்பது இதுதானா எனவும் எண்ணத் தோன்றியது.
தம்மிக என்ற அந்த அன்னாசி வியாபாரி எமக்குக் கூறிய விடயங்கள் இவை.
“நான் 14 வருடங்களாக இங்குதான் அன்னாசி விற்கிறேன். கொள்ளுப்பிட்டி முதல் வெள்ளவத்தை வரை பல தடவைகள் நடந்து நடந்தே கால் வலிக்கும். இருந்தாலும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருப்பதாலும் பழக்கப்பட்ட தொழில் என்பதாலும் சளைக்காமல் செய்து வருகிறேன்.
இங்கு எனக்கு நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது. காதல் லீலைகள், கள்வர்கள் முதல் எத்தனையோ அநியாயங்களை நேரடியாகப் பார்த்து வருகிறேன்.
காதலர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தாழை மரங்களுக்குள் கணவன் மனைவிபோல் அந்நியோன்னியமாக நடந்துகொள்பவர்களும் இருக்கிறார்கள்.
ஒருசிலர் தினமும் இந்தக் கரையோரங்களில் தான் பொழுதுபோக்குகிறார்கள். நான் அடிக்கடி காணும் ஓர் இளைஞர் இருக்கிறார். மெலிந்த உடம்புடன் தலைமயிர் அதிகமாக வளர்த்திருப்பார். அவர் வெவ்வேறு பெண்களை இங்கு அழைத்து வருவதைக் கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் என்ன வாழ்க்கையடா இது என நொந்துகொண்டே அவர்களைக் கடந்து போனதுண்டு.
இந்தத் தாழை மரங்கள் அடர்ந்து வளர்ந்தவை போல வெளியில் காட்சி தரும். உள்ளே ஆட்கள் இருந்தாலும் வெளியில் தெரிவதில்லை. அதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவர்கள் அநாகரிகமான முறையில் நடந்துகொள்கிறார்கள். சிலரை பார்க்கவே கண்கூசும். அந்தளவுக்கு மோசமாக நடந்துகொள்வார்கள். அங்கே பாருங்கள், ஒரு அடர்ந்து படர்ந்ததாய் தாழை மரங்கள் தெரிகின்றன தானே? அதில் யாரும் இல்லை என நினைத்தீர்களா? இரண்டு காதல் ஜோடிகள் தாம் நினைத்ததைப்போல உல்லாசமாக இருக்கிறார்கள்.
எனது தொழில் அன்னாசி விற்பதுதான். ஆயினும் நான் அவர்களைப் பார்க்கும் நோக்கில் செல்வதில்லை. எனினும் என்னைக் கண்டதும் சிலர் முறையற்ற விதத்தில் திட்டித் தீர்ப்பார்கள்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நாம் இவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே முச்சக்கரவண்டி சாரதியொருவரும் இணைந்துகொண்டார்.
இரவு வேளைகளில் தாழை மரங்களுக்கிடையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இரவு வேளைகளில் மதுபான போத்தல்களுடன் அங்கு வரும் இளைஞர்கள் போத்தல்களையும் ஏனைய பொருட்களையும் அதே இடத்தில் எறிந்துவிட்டுச் செல்கிறார்கள். இந்தக் கொஞ்ச நாட்களாக பெண்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது என்றார் அவர்.
அவர் கூறிய அதிர்ச்சிதரும் தகவல் பாடசாலை மாணவர்களும் இங்கு வருகை தருகிறார்கள் என்பதுதான்.
இது எம்மை ஆழமாகச் சிந்திக்க வைத்தது.
பாடசாலை சீருடை தவிர்ந்த ஏனைய உடைகளில் வரும் பாடசாலை மாணவர்கள் தகாத வகையில் செயற்படுவதாகவே அவர் குற்றம் சுமத்துகின்றார்.
திறந்த வெளியில் தாழை மரங்களுக்கிடையில் இவ்வளவு விடயங்கள் நடக்கிறது யார் கண்களுக்கும் தெரியவில்லையா? அல்லது கண்டும் காணாததுபோல் சென்றுவிடுகிறார்களா?
உண்மையில் சிறு விடயங்கள் என நாம் கவனமெடுக்கத் தவறுபவை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நிலைமையும் உண்டு.
அந்த வகையில் நமது சமூகத்துக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது என்றே கூற வேண்டும்.
காதலிப்பது தவறில்லை. அன்பின் பிணைப்பில் எதிர்பால் உணர்வுகளை ஒருங்கே சங்கமிக்கச்செய்து எதிர்மறைகள் அனைத்தையுமே கட்டிப்போட்டு இலட்சியத்தோடு நடக்கத்தூண்டும் ஆழத்தோடான புனிதமான உறவு காதல். காதல் தவறு என்பது எங்கினும் குறிப்பிடப்படவில்லை. அது தவறு என்று சொல்வதற்கும் இல்லை.
ஒவ்வொரு இளைஞனுக்கும் இலட்சியம் உண்டு. அந்த இலட்சியத்துக்காக பாடுபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கிடையில் உருவாகும் காதல் அவர்களுடைய உயர்ந்த இலட்சியத்தை பாதிக்குமாக இருந்தால் அல்லது அந்த இலட்சியத்துக்கு முழுத்தடையாக இருக்குமென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காதல் செய்யும்போது தம்மை காவியங்களின் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நினைத்து யதார்த்தத்தை மறந்து களிக்கும் காதலர்கள் எத்தனை பேர் தமது இலட்சியம் பற்றிச் சிந்திக்கிறார்கள்?
ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம். அவசரமாக நகரும் உலகத்தில் இந்த விடயங்களையெல்லாம் பார்க்க வேண்டுமா? இதனால் நமக்கென்ன இலாபம்? என நினைத்து அநியாயங்களைக் கண்டும் காணாமல் செல்வோரும் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
திறந்த வெளியில் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொள்வதுதான் உண்மையான காதல் என தாழை மரங்களுக்கிடையில் காதலிக்கும் சிலர் நினைத்துச் செயற்படுகிறார்கள். சிறுபிள்ளைகளை கடற்கரைக்கு விளையாடுவதற்காக அழைத்து வரும் குடும்பத்தார் குறித்தும் வளரும் பராயத்தினர் குறித்தும் இவர்கள் சற்றேனும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
கரையோரமாக அமைந்துள்ள பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திலிருந்து வெள்ளவத்தை வரை நாம் நடந்து சென்றோம்.
அங்கு நாம் கண்ட விடயங்களை படங்களாக பிரசுரிக்க முடியாது. கடற்கரைக்கு யார் வருகிறார்கள்,போகிறார்கள் என்றெல்லாம் சிலருக்குக் கவலையே இல்லை. தமது சில்மிஷங்களில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
உண்மையில் வெள்ளவத்தை கடற்கரை இவ்வாறான நடத்தைகளுக்கு துணைபோவதற்கு பாதுகாப்புத் தரப்பினரையும் குறை சொல்கிறார்கள் வர்த்தகர்கள் சிலர்.
எது எவ்வாறெனினும் பொது இடங்களில் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வது தவிர்க்கப்பட வேண்டும். பாதுகாப்புத் தரப்பினரை மாத்திரம் குற்றம் சொல்லிக் காலம் கடத்தாமல் சமூக அக்கறையுடன் அனைவரும் இணைந்தே இவ்வாறான குற்றச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
0 கருத்து:
கருத்துரையிடுக