புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகம் எங்கும் கடவுளுக்கு நிகராகப்போற்றப்படுபவர்கள் !. ஏனெனில் அவர்கள் ஒரு உயிரைக் காப்பாற்றுகின்ற உன்னதமான பணியில் இருப்பதால் அவர்கள் அவ்வாறு நினைவு கூரப்படுகின்றார்கள்.


ஏராளமான மருத்துவர்கள் ஏழை மக்களுக்கும், அனாதைகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மிகக் குறைந்த கட்டணத்திலோ அல்லது அதைக் கூட வாங்காமலோ உயர்தர மருத்துவச் சிகிச்சை செய்திருக்கிறார்கள். இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களால் தான் இன்னமும் மனிதம் இப்புவியில் வேர்விட்டுத் தழைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் இதற்கு எல்லாம் நேர்மாறாக பணத்தை மையமாகக் கொண்டு இன்றைய மருத்துவத் துறை அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது தான் வேதனையிலும் உச்சம். சுருக்கமாகச் சொன்னால் பணமுள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள் ஏழைகள் அநியாயமாக சாகடிக்கப்படுகிறார்கள்.

இனி விடயத்துக்கு வருவோம்… சமூக சேவை நோக்கம் கொண்ட அனுபவத்திலும் முதிர்ந்த பல்வேறு மருத்துவர்களைக் கண்ட யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று சில மருத்துவர்களின் தன்னிச்சையான தான்தோன்றித்தனமான பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகள் உண்மையிலேயே மிகுந்த மன வருத்தத்தை தருகின்றன.


அதிலும் குறிப்பாக இந்த ஏழை மக்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் படும் பாட்டை நினைக்க மிகுந்த வேதனையாக உள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் பல மருத்துவர்கள் வெளியில் பல கிளினிக்குகளை நடாத்தி வருவது யாவரும் அறிந்ததே. இவர்கள் நடாத்தும் கிளினிக்குகளுக்கு செல்பவர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் ராஜ மரியாதை அளிக்கப்படுகிறது என்ற செய்தியே யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத கசப்பான உண்மையாக இருக்கின்றது.

வெளியில் உள்ள தனியார் கிளினிக்குகளில் நோயாளிகள் செல்லும் போது அவர்களுக்கு ஏதும் அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தால் அவர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. தனியார் கிளினிக்குகளில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுக்கள்களை யாழ் போதனா வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்த்தால் அவர்களுக்கு முதலில் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக்கப்பட்ட மருத்துவத்துறை இன்று பணம் காய்க்கும் மரமாக மாறி விட்டது.

இதன் காரணமாக ஏராளமான ஏழை மக்கள் அறுவைச் சிகிச்சை செய்ய போதுமான பணம் கிடைக்காமையினால் இறந்து போயிருக்கிறார்கள்.


குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த ஏழை மக்கள் தங்களுக்கு தரமான மருத்துவ உதவிகள் மற்றும் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக யாழ்ப்பாணத்தை நோக்கியே படையெடுக்கிறார்கள். ஆனால் அப்படி நம்பி வரும் இந்த அப்பாவி ஜனங்களுக்கு கடைசியில் எதுவும் நடப்பதில்லை. நம்பி ஏமாந்து போகின்றார்கள்.

இதனையும் தாண்டி அரங்கேறும் இன்னொரு கொடுமை தனியார் கிளினிக்குகள் வைத்திருக்கும் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் அங்கேயே விலைகூடிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தங்களுடைய கிளினிக்குகளுக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள். இலவசமாக கிடைக்கும் இவற்றைக் கொண்டு மருத்துவம் பார்த்து கொழுத்த இலாபம் பார்த்து விடுகிறார்கள்.

இன்று வரை இலங்கையில் மருத்துவக் கல்வி இலவசமாகவே வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு மருத்துவபீட மாணவனுக்கு அரசு இலட்சக்கணக்கில் செலவு செய்கின்றது. பின்னர் மருத்துவனாக வெளியேறிய பிற்பாடும் ஆயிரக்கணக்கில் சம்பளம் வழங்குகின்றது.

கடவுளுக்கு நிகராகப் போற்றப்படும் மருத்துவத் துறை இன்று சில அயோக்கியர்களின் கைகளில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகின்றது. தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவுக்கு ஏராளமான மக்கள் தங்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் உடனடி அறுவைச் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்று புகார் கூறியிருக்கிறார்கள்.

தனியார் கிளினிக்குகளில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுக்கள்களுக்கு மட்டும் தான் அங்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், அப்படி மோசடி செய்யும் தனியார் கிளினிக்குகளின் விபரங்களும் எம் வசம் உள்ளன.

தனியார் கிளினிக்குகளின் பற்றுச் சீட்டுக்கள், யாழ் போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு என்று வழங்கப்பட்ட டோக்கன்கள் ஆகியன ஆதாரங்களாக உள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஏழு கிளினிக்குகள் மீது பலதரப்பட்ட மக்களும் இவ்வாறான புகார்களைக் கூறியிருக்கிறார்கள்.

தொடர்ந்தும் இவ்வாறு செயற்படும் பட்சத்தில் அப்படியான தனியார் கிளினிக்குகளின் பெயர்கள் அதன் புகைப்படங்கள், பற்றுச் சீட்டுக்கள் போன்ற அனைத்து ஆதாரங்களும் இவ்விடம் அம்பலப்படுத்தப்படும்.

ஆசிரியர் குறிப்பு – யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மீதான, குறிப்பாக தனியார் கிளினிக்குகளுக்குச் சென்றவர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமை தொடர்பான தகவல்களைக் கேள்விப்பட்டால் அதற்கான ஆதாரங்களுடன் பொதுமக்களாகிய நீங்கள் எமது செய்திப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கும்படி வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top