உலக அழிவு பற்றிய ஒரு செய்தி பரவி உலக நாடுகள் பல வற்றிலும் மக்கள் பதற்றத்துக்குள்ளாகியிருப்பது கொஞ்சம் புதுமையானதுதான். இம்மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (21.12.2012) அன்று உலகம் அழியப்போகிறது என்று மாயன் இன மக்களின்
கலண்டரில் சொல்லப்பட்டிருப்பதைக் கணிசமான உலக மக்கள் நம்புவதே இந்தப் பீதிக்குக் காரணம்.
தென்அமெரிக்காவின் பெருமற்றும் பிரேசில் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் இந்த மாயன் இன மக்கள். சிலைகள், கோயில்கள் என்று பல கலாசார சின்னங்கள் கொண்ட மாயன்நாகரி கத்தைச் சேர்ந்த மக்கள் பலகலைகளிலும் மிகுந்த விற்பன்னர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என அறியப்படுகிறது. இந்த மக்களின் கலண்டரில் இருப்பதாகச் சொல்லப்படும் எத்தனையோ ஆருடங்களில் ஒன்றுதான் இந்த பூமியின் அழிவு பற்றிய தகவலும்.
மாயன் இன மக்கள் உருவாக்கிய அந்தக் கலண்டர் 5125 ஆண்டுகளுக்கு உரியது. அது இந்த 21 ஆம் திகதி முடிவுக்கு வருகிறது. கலண்டர் முடியும் நாளில் உலகம் இருக்காது என்ற அனுமானமே இந்தப் பீதிக்குக் காரணம். ரஷ்யாவிலேயே மக்கள் அதிகளவுக்கு நடுங்குவதாக ஊடகங்கள் நாளுக்குநாள் செய்திகளைத் தருகின்றன.
வழக்கம் போல ஊடகங்கள், புதிதாகக் கிடைத்திருக்கும் இந்தப் பரபரப்பைத் தங்கள் வியாபாரத்திற்கு நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பேட்டி,கட்டுரை,வரைபடம் என்று ஊதி ஊதிப் பெரிதாக்கி மக்களை முடிந்தளவுக்குப் பயமுறுத்துகிறார்கள். ரஷ்ய சிறைகளில் மயான அமைதி நிலவுகிறது. விரோதிகள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மன்னிப்புக் கேட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். கடைகளில் கூட்டம் இல்லை. வைத்திருப்பவர்கள் இலவசமாக அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் உலக அழிவு நிச்சயம் என்பது போலச் செய்திகள்.
உலகம் அழியாது, இதெல்லாம் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று விடுக்கப்படும் அறிவிப்புகளை யாரும் சட்டை செய்வதாயில்லை. உலக சமுதாயமே அழிவுச் செய்திகளைக் கேட்பதற்குத்தான் ஆவலாயிருப் பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரு, பிரேசில் நாடுகளுக்கு அமெரிக்கர்கள் போய் குவிகின்றனர். சுற்றுலாப் பயண நிறுவனங்கள், தனியார் விமானசேவைகள் எல்லாம் இந்தப் பரபரப்பையும் மேலும் விசிறிப்பணம் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
இந்தப் பீதியின் விஸ்வரூபத்தைப் பார்த்துவிட்டு, நாசா விஞ்ஞானிகள் உலகம் அழியாது அதற்கு எந்த வாய்ப்பும் இப்போதைக்கு இல்லை என்று அறிவிக்கின்றனர். இராட்சத எரிகல் பூமியை தாக்கி அழிக்கும் என்பதே பரவலாக பயமுறுத்தப்படும் செய்தி. கடைசியாக ஆறரைக் கோடி வருடங்களுக்கு முன் அப்படி நடந்தது. டைனோசர்கள் அப்போது அழிந்தன. இப்போதைக்கு அது இல்லை என்கிறது நாசா.
காலத்துக்குக் காலம் இப்படி எவராவது பூமி அழியும் என்ற மிரட்டல்களைச் செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அப்படி அழிவு நடக்கத்தான் போகிறது என்றால், எவராலும் தடுக்க முடியாததைப் பற்றிச் சும்மா கவலைப்பட்டு என்ன? தவிரவும்,சாகப்போகும் சமயத்தில் நல்லது செய்ய நினைப்பது மனித இயல்பு. இந்தத் தருணத்திலாவது, மனிதர்களிடையேயும், சமூகங்களிடையேயும் பகையும் வெறுப்பும் எதற்கு? எல்லா வற்றையும் விட்டுவிட்டு நம் கரங்களைக் கோர்த்துக் கொள்ளலாமே என்று நம்மில் பலர் நினைப்போமென்றால், அதுதான் மாயன் கலண்டரின் வெற்றி என்று வாழ்த்தலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக