டெல்லியிலிருந்து கிளம்பிய ரயிலில் ஏறிய ஒரு இளைஞரும், இளம் பெண்ணும் எதிர்பாராமல் சந்தித்துப் பேசிக் கொண்டனர். பேசிய சில மணி நேரத்திலேயே இருவரும் காதலில் விழுந்தனர். விழுந்த வேகத்தி்ல அது கல்யாணத்திலும் போய்
முடிந்தது. ரயில் நிற்பதற்குள் கல்யாணத்தையும் முடித்துக் கொண்டு கணவன், மனைவியாக இறங்கிச் சென்றனர்.
டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து அந்த வாலிபர் ரயிலில் ஏறினார். அவர் லக்னோ செல்ல வேண்டும். அதே ரயிலில் ஏறினார் அந்தப் பெண். அவர் கான்பூர் போக வேண்டும். இருவரும் ஏறிய ரயில் பூர்வா எக்ஸ்பிரஸ். இருவருக்கும் ரயிலில் எதிரெதிர் சீட் தரப்பட்டிருந்தது. ஏறி அமர்ந்தனர் அந்தஇருவரும், இன்னும் சில மணி நேரத்தில் தங்களது தலையெழுத்து மாறப் போவதை உணராமல்.
எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்ததால் பயணக் களைப்பு தெரியாமல் இருக்க சம்பிரதாயமாக எல்லோரும் பேசிக் கொள்வதைப் போல இந்த இருவரும் பேச ஆரம்பித்தனர். ஹாய் என்று ஆரம்பித்து என்ன பண்றீங்க, எங்கே போறீங்க, கல்யாணம் ஆயிருச்சா என்று தொடங்கிப் பேசியவர்கள் மின்னல் வேகத்தி்ல இதயம் தொட்டு உறைந்து நின்றனர்.
இருவரது இதயங்களும் மெல்ல மெல்ல இருவரது விழிகள் வழியாக இடம் மாறத் தொடங்கின. இவள் எனக்கானவள் என்ற எண்ணம் அந்த இளைஞருக்குள் தோன்ற, அதே நேரத்தில் இவன் எனக்கானவன் என்று அவரும் உணர அங்கே ஒரு உணர்ச்சிப் பரி்மாறல் சத்தமில்லாமல் நடந்தேறியது.
அலிகார் ரயில் நிலையம் வரும்போது இருவருமே மிகவும் நெருங்கிப் போயிருந்தனர். நீ எனக்காகப் பிறந்தவள், நீ எனக்காக பிறந்தவன் என்று இருவரது இதயங்களும் தடதடத்துச் சொல்ல ஆரம்பித்தன.
அதற்கு மேல் ஒரு விநாடி கூட இருவரும் தாமதிக்க விரும்பவில்லை. டக்கென எழுந்து, அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் நாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறோம். அதுவும் உடனே. செய்து வைப்பீர்களா என்று கோரிக்கை வைத்தபோது ரயிலே ஒரு நொடி படபடத்து ஓடியது போல இருந்தது பயணிகளுக்கு.
ஆனாலும் அந்த இளம் ஜோடியின் தவிப்பையும், அவர்களுக்குள் ஆழமாக ஊடுறுவிப் போயிருந்த காதலையும், இருவரும் உயிருக்கு உயிராக மாறிப் போய் நேசிக்க ஆரம்பித்ததையும் கண்ட பயணிகள் சரி என்று களத்தில் குதித்தனர்.
ரயில் பெட்டி மணமேடையானது. அக்கம்பக்கத்துப் பெட்டிகளில் பயணித்தவர்களும் வந்து சேர ஒரே அமர்க்களமாக, குஷியான குரல்களுடன் ஆரவாரத்துடன் திருமணம் நடந்தேறியது. ரயிலில் பயணம் செய்த ஒரு திருமண புரோகிதரே இந்த ஜோடிக்கும் திருமணத்த்தை நடத்தி வைக்க சட்டையைக் கழற்றிப் போட்டு களம் குதித்தார். அவர் மந்திரம் சொல்ல ஓடும் ரயிலில் இரு இதயங்களை அத்தனை பயணிகளும் சேர்ந்து இணைத்து வைத்த அந்த சம்பவம் நிச்சயம் ஒவ்வொரு பயணிக்கும் மறக்க முடியாத சந்தோஷ தருணம்.
பின்னர் துன்ட்லா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து சேர்ந்தபோது போலீஸ் வடிவில் ஒரு பார்ட் டைம் வில்லன் வந்து சேர்ந்தார். எப்படி இப்படி திருமணம் செய்யலாம் என்று அவர்கள் கேட்க, அந்த இளம் ஜோடி, நாங்கள் மேஜர், எங்களுக்கு இதற்கு உரிமை உள்ளது என்று இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுக்கப் பிடித்தபடி சொல்ல போலீஸ் சல்யூட் வைக்காத குறையாக கிளம்பிச் சென்றது.
பிறகென்ன பயணிகளாக ஏறிய அந்த இளம் ஜோடி, காதல் வானிலே சிறகடித்தபடி தாங்கள் இறங்க வேண்டிய ஊரில் இறங்கி சொந்த பந்தங்கள் முன்பு தங்களது புதிய சொந்தத்தை அறிமுகப்படுத்தி உற்சாகமாக கிளம்பிச் சென்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக