யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டுஇழுத்துச் செல்லப்படுகின்றார்கள்.
இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்,சட்டத் தரணி க.சுகாஷ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில் நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :
இன்று போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. ஆண்கள் பலர் இறந்துவிட்டார்கள். சிலர் வெளி நாடுகளுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார்கள். ஆனால் அவர்களின் தாய்மார்கள், அக்கா, தங்கைமார்கள், மனைவிமார்கள், குழந்தைகள் யாவரும் பலவிதமான இக்கட்டுகளுக்கு, இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வன்முறையாளர்களின் கொடுமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளனர். அதுமட்டுமல்ல, இன்று யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. இங்கிருந்து பெண்கள் தெற்குக்கு அழைத்துச் செல்லப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். அதேநேரம் இங்கு விபசாரம், பாலியல் வன்புணர்வுகள், களவுகள், கடத்தல்கள், ஒப்பந்தக் கொலைகள் என்பன முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகின்றன.
இந்த 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நான் இங்கு வந்தபோது பெண்பிள்ளைகள் இரவு12 மணிக்குக்கூட நகைகள் அணிந்தவாறு எந்தவிதப் பயமோ, பதற்றமோ இன்றிப் பாதுகாப்பாகச் செல்லக்கூடியதாக இருக்கின்றது என்று இங்குள்ளவர்கள் கூறினார்கள். இன்று வீட்டுக்குள் இருக்கும் போதே என்ன நடக்குமோ,ஏது நடக்குமோ என்ற பயம். இந்தப் பயமும் பீதியும், வெளியில் இருந்து வந்தவர்களால் மட்டுமே ஏற்படுத்தப்படுகின்றது என்று கூறுவதிலும் பார்க்க வெட்கம், சூடு, சொரணை இன்றிப் பெரும்பாலும் யாழ். மண்ணின் மைந்தர்களால் இயற்றப்படுகின்றன என்று கூறுவதுதான் சரி.
சீரழிந்த வாழ்க்கைக்கு இழுக்கப்படும் இளைஞர்:
எங்கள் அருமந்த இளைஞர்களும் யுவதிகளும் வடமாகாணத்தில் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுவதாக நான் உணர்கின்றேன். சினிமாக் கலைஞர்களின் படங்களுக்குப் பாலாபிஷேகம் செய்து கற்பூரம் காட்டும் அளவுக்கு எங்கள் இளைய சமுதாயம் சென்றுவிட்டது என்றால் படிப்பிலும்,பண்பிலும், பாங்கிலும், பராக்கிரமத்திலும் சிறந்துவிளங்கிய எங்கள் இளைய சமுதாயத்தினருக்கு என்ன நடந்தது? இன்று எங்கள் ஆண்களோ, பெண்களோ தமது சுயநலத்துக்காக எதனையுஞ் செய்யக் காத்திருக்கின்றார்கள். தாங்கள்,திட்டமிடுவோரின் கைப்பொம்மைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியாமல் அவர்கள் வலையில் வீழ்ந்துள்ளார்கள்.
மதுபோதையில் சிகரட்டுடன் சட்டத்துக்கு முரணான விதத்தில் பஸ்களில் பிரயாணஞ் செய்து பிரயாணிகளை இம்சைப்படுத்துகிறார்கள். வன்செயல்களைத் தூண்டிவிடுகின்றார்கள். வன்செயல்களில் ஈடுபடுகின்றார்கள். களவு, கொள்ளைகளில் வெளியார் தொடர்புகளோடு கூட ஈடுபடுகின்றார்கள் உடல், உளரீதியாகப் பெண்கள் முக்கியமாகப் பாதிக்கப்படும் வண்ணம் நடந்து கொள்கின்றார்கள். இன்று மிகமோசமான இளைஞர்கள் உருவாகி வருகின்றார்கள்.
சுயநலமும் மூர்க்கத் தனமும்:
அரக்கர்கள் பற்றிக் கதைகளில் வாசித்துள்ளோம். இன்று அரக்கர் குணம் எங்கள் சூழலில் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. சுயநலமும் மூர்க்கத்தனமும் கொண்ட இவர்களால் எமது வருங்காலம் பறிபோகப் போகின்றது. நடைபெறும் நடவடிக்கைகளுள் ஒரு முக்கியமான விடயம் பொதிந்து கிடக்கின்றது. அதுதான் எங்கள் ஒற்றுமை. வெளியார் இழைக்கும் பல பிழைகளுக்கும் பின்னணியில் எம்மவரில் ஒருவர் காரண கர்த்தாவாக மறைந்திருந்து செயல்பட்டுள்ளார்,செயல்படுகின்றார் என்பது நீங்கள் ஊன்றி ஆராய்ந்தீர்களானால் புலப்படும். நாங்கள் சுயநலத்துடன் செய்யுங் காரியங்கள் எமக்கு வினைப் பயனை ஒரு நாள் ஏற்படுத்தும் என்ற அறிவு இன்றி இப்பேர்ப்பட்ட இழிசெயல்களில் எம்மவர் ஈடுபடுகின்றார்கள். நான் முன்னர் குறிப்பிட்ட அபலைப் பெண் வாழ்க்கையிலும் ஒரு தமிழரின் பங்களிப்பு இருந்ததாகக் கூறப்படுகின்றது. எங்களை நாங்களே காட்டிக்கொடுப்பது,பலியெடுத்தல், பணத்துக்காகச் சிறுமையில் ஈடுபடல் போன்றவை உயர்ந்த நோக்கங்களை முன்வைத்த பண்டைத் தமிழ் இனத்துக்கும் பல நூற்றாண்டு கால இந்து மதத்துக்கும் இழிவையே தரவல்லன.
வெளியில் இருந்து வந்தவர்களுக்கு வேலைக்காரர் ஆகாதீர்கள் எம்மவர் இவ்வாறான மாமா வேலைகளில் ஈடுபடாது இருக்க, வெளியில் இருந்து வந்தவர்களுக்கு வேலைக்கார வேலை செய்யாது இருப்பதற்கு உங்களுள் நீங்கள் ஒற்றுமையை வளர்க்கப் பாடுபடவேண்டும். ""ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை இன்றேல் சகலர்க்குந் தாழ்வே´´ என்பதை நாங்கள் மறவாது இருப்போம்.உங்களைப் போன்ற இளைஞர், யுவதிகள் மற்றைய இளவயதினர்களுக்கு அறிவுரை வழங்கலாம் என்று நினைக்கின்றேன். முக்கியமாக நாங்கள் திட்டமிட்ட செயல்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றோம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
எமது பெற்றோர்களும் தமது இளம் சமுதாயம் மீது அக்கறை காட்டவேண்டும். பிள்ளைகள் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்று நினைத்து அவர்கள் மீது கோபத்தையும் வெறுப்பையும் காட்டாது அவர்களுடன் சிநேகத்துடன் பழகிப் பெற்றோர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாங்கள் யாவரும் ஒன்றுபட்டால் பிறழ்ந்து வாழத்தலைப்படும் எம்மக்களை நாங்கள் ஈடேற்ற முடியும். அவர்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும். உதாரணத்துக்குப் போதைவஸ்துக்கள் விற்பவன் என்ன செய்கின்றான் என்று பாருங்கள். எங்கள் கல்லூரிகளுக்கு வெளியில் வைத்து முதலில் இனிப்பான பண்டங்கள் விற்று,பின்னர் போதை சேர்த்த தின்பண்டங்களை விற்றுக் கடைசியில் போதைப் பொருள்களையே விற்கின்றான். நாளடைவில் மாணவ, மாணவியர் போதைக்கு அடிமையாகின்றார்கள். அதேபோல் விபசாரம், பாலியல் வல்லுறவுகள், புகைப்பிடித்தல், ஆபாசப் படங்கள் காட்டுதல், இரவு வெகுநேரம் வரையில் களியாட்டங்களை ஒழுங்கு செய்தல் போன்றவையாவும் தமிழ் இளைஞர்,யுவதிகளின் வாழ்க்கை முறையை மாற்றி இனிமேல் எந்தக்காலத்திலும் தமக்கென அவர்கள் உரிமைகளை நாடாது இருக்க வேண்டும் என்பதாலேயே என்ற கருத்தை மாணவர் மனதில் பதியவைக்க வேண்டும்.
திட்டமிட்ட செயல்களுக்கு நாங்கள் அடிமைகள் ஆக்கப்படுகின்றோம் என்ற எண்ணம் எங்கள் இளைய சமுதாயத்தினரிடையே பதியப்பட்டுவிட்டால் அவர்கள் உசாராகிவிடுவார்கள். அதனை நீங்கள்தான் செய்ய வேண்டும். உங்கள் பெற்றோர் செய்ய வேண்டும். உங்கள் ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.பாரம்பரியத்தை காப்பாற்றுவோம். எங்கள் பாரம்பரியம் பழைமையானது, சிறப்பு மிக்கது, எங்கள் ஒருவரின் இரகசிய துர்ச்செயல் எங்கள் பாரம்பரியத்தை இழிவுபடுத்தவல்லது என்பதை நாங்கள் மறவாது இருப்போமாக!இன்றைய காலகட்டத்தில் எமது இளைஞர்கள், யுவதிகள் "நாங்கள் அல்லது எங்கள் முன்னோர் எங்கள் வாழ்க்கையில் எங்கே பிழை செய்துவிட்டோம், அந்தப் பிழைகளைத் திருத்த நாம் என்ன செய்ய வேண்டும்´´ என்ற ஆராய்ச்சிகளில் நுழைவது நன்மையையே அளிக்கும்.
அதேநேரத்தில் எமது சமுதாயத்தில் எங்கள் பிழைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் எம்மவர்களுக்கு நாம் எவ்வாறு நிவாரணங்களையும் மனச்சாந்தியையும் உண்டுபண்ண முடியும் என்பது பற்றியும் சிந்தித்து உரிய நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அவ்வாறு இறங்கினால் எங்கள் சங்கம் நாடு முழுவதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக