கோவாவில் உள்ள பள்ளி ஒன்றில் 7 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் உள்ள வாஸ்கோவில் இருக்கும் பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி நேற்று பள்ளி நேரத்தின்போது கழிவறைக்கு சென்றார். தலைமை ஆசிரியையின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கழிவறையில் வைத்து அந்த சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கற்பழித்துள்ளார்.
வீட்டுக்கு சென்ற சிறுமி பள்ளியில் நடந்ததைக் கூறி வலி தாங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த பிற பெற்றோர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் நேற்று இரவு அந்த பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினர். பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். பிரச்சனை பெரிதானவுடன் கோவா முதல்வர் மனோகர் பாரிகர் நேற்று நள்ளிரவு பள்ளிக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்தார். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து அந்த நபரின் படத்தை போலீசார் வரைந்துள்ளனர். ஆனால் அவர் யார் என்று இன்னும் அடையாளம் தெரியவில்லை. இந்நிலையில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பழிப்பு சம்பவம் நடந்த பள்ளியின் வாயிலில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் காவலுக்கு உள்ளனர். அவர்கள் காவலையும் மீறி இந்த ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து சிறுமியை சீரழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக