ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய முதல் லீக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் டிராவிட் பீல்டிங் தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்த கெய்ல்- முகுந்த் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். அதிரடி வீரர் கெய்ல் 16 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு முகுந்த் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முகுந்த் 21 பந்தில் ஒரே ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்.
டி வில்லியர்ஸ் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கோலி 35 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வினய்குமார் 3 சிக்சர் விளாச ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் டிராவிட்- ரகானே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார். முதல் பந்தில் டிராவிட் கொடுத்த கேட்சை கோலி தவறவிட்டார். கடந்த சில போட்டிகளில் சொதப்பிய ரகானே இந்த போட்டியிலும் 2 ரன்கள் எடுத்து ஏமாற்றினார்.
2-வது விக்கெட்டுக்கு டிராவிட் உடன் விக்கெட் கீப்பர் சாம்சன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 48 ரன்னாக இருக்கும்போது டிராவிட் 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு சாம்சனுடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்கள். 14.2 ஓவரில் 116 ரன் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. சாம்சன் 63 ரன்கள் எடுத்த நிலையில் ராம்பால் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வாட்சனுடன் ஹாட்ஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. வாட்சன் 18.3 ஓவரில் 162 ரன்னாக இருக்கும்போது 41 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
9 பந்தில் 10 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவர் 4-வது பந்தில் ஹாட்ஜ் 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார். 6-வது பந்தில் பின்னி 1 ரன் எடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 6 ரன் தேவைப்பட்டது.
வினய்குமார் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் பின்னி 1 ரன் எடுத்தார். 2-வது பந்தில் ஹாட்ஜ் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனால் 4 பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. 3-வது பந்தை ஷா சந்தித்தார். இதில் ஒரு ரன்னும், ஷா ரன் அவுட்டும் ஆனார். 4-வது பந்தில் பால்க்னர் 1 ரன் எடுத்தார். இதனால் கடைசி இரண்டு பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தை பின்னி சந்தித்தார். அவர் அருமையாக ஒரு பவுண்டரி அடித்தார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக