அமெரிக்காவில் பூட்டிய காருக்குள் சுமார் 3 நாட்களாக சிக்கி தவித்த 90 வயதான, இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய மூத்த ராணுவ அதிகாரி, வழிபோக்கர் ஒருவரின் உதவியுடன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.
ஃப்ளோரிடாவின் பாஸ்கோ பகுதியில் பூட்டிய காருக்குள் அம்பரோஸியா என்னும் 90 வயது முதியவர் ஒருவர் சுமார் மூன்று நாட்களாக சிக்கி தவித்துள்ளார். கடந்த மாதம் 30 ஆம் தேதி, பப்ளிக்ஸ் பல்பொருள் அங்காடிக்கு சென்ற இவர் தவறி விழுந்ததில், அவரது இடுப்பு மற்றும் கை எலும்புகள் உடைந்தன.
பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் உதவியுடன் காரில் ஏறிய அம்பரோஸியா, வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்தார். ஆனால், அவரது கை எலும்பு உடைந்ததால் அவரால் கார் கதவை திறக்க முடியவில்லை.
காரிலும் பெட்ரோல் தீர்ந்துவிட, தனது உடலை அசைக்கமுடியாமல் 3 நாட்கள் வரை பூட்டிய காருக்குள்ளேயே இருந்துள்ளார். பல முறை உதவிக்கு தன்னை கடந்து செல்பவர்களை அழைத்தாலும், இவரது குரல் கேட்காததால் அவர்களால் இவருக்கு உதவி செய்யமுடியவில்லை.
இந்நிலையில், அந்த கார் நின்றுகொண்டிருந்த காரேஜுக்கு அருகில் நடந்து சென்ற டிம் விட்மான், முதியவரின் குரல் கேட்டு அவரை காப்பாற்றியுள்ளார்.
தகவலறிந்த போலீசார் உடனடியாக மீட்கப்பட்ட அம்பரோஸியாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பெற்றுவரும் முதியவர், இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய மூத்த ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக