மும்பையை சேர்ந்த காதல் ஜோடி, இன்று( 12.12.12) திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்கள் தங்கள் காதல் திருமணத்தை, 10.10.10ல் நிச்சயம் செய்துள்ளனர்; அதை, 11.11.11ல் பதிவு செய்துள்ளனர்.பாந்த்ரா பகுதியை சேர்ந்தவர், பிராண்டன் பெரெரா, 33. வளைகுடா நாடு ஒன்றில், கப்பல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இவர், எமிலியா டி சில்வா, 28, என்ற பெண்ணை, 12 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இவர்களின் காதல் கதை, பள்ளிப் பருவத்திலிருந்தே துவங்கியது. இருவரும், ஒருவரை ஒருவர் மனதார விரும்பினர். காதல் பறவைகளாக வலம் வந்த இந்த ஜோடி, 2009ல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. 12 ஆண்டு காதல் திருமணத்தை, எந்த காலத்திலும் மறக்க முடியாத அளவிற்கு, பதிவு செய்ய, முடிவு செய்தது.
இருவரும் பேசி முடிவு செய்த படி, 10.10.10ல், அதாவது, 2010ம் ஆண்டின், அக்டோபர் மாதம், 10ம் தேதி, திருமணம் செய்து கொள்ள, முறைப்படி முடிவு செய்தனர். உடனே திருமணம் செய்து கொள்ள விரும்பாமல், ஜோடி நாட்களில், படிப்படியாக மேற்கொள்ள விரும்பினர்.கடந்த, 2011ம் ஆண்டு, நவம்பர் மாதம், 11ம் தேதி, 11.11.11ல் தங்கள் திருமணத்தை, திருமண பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
திருமணத்தை, ஓராண்டு கழித்து, கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்துக் கொள்ள விரும்பினர்.அதன்படி இன்று, 12.12.12ல், பாந்த்ரா சர்ச்சில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.இதுபற்றி பிராண்டன் - எமிலியா ஜோடி கூறியதாவது:
எங்கள் வாழ்க்கையில் இப்படியொரு ஜோடி நாட்கள் வரும் என, நினைக்கவே இல்லை. 12 ஆண்டுகளாக காதலித்தோம். இத்தனை ஆண்டுகளாக பொறுமையாக இருந்த நாங்கள், எங்கள் திருமணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும், வித்தியாசமான நாட்களில், பதிவு செய்ய விரும்பினோம். அதன்படி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததை, 10.10.10லும், திருமணத்தை முறைப்படி, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததை, 11.11.11லும் செய்தோம். 12.12.12ல் திருமணம் செய்ய காத்திருக்கிறோம்.
எங்களைப் போன்ற அதிர்ஷ்டசாலியான ஜோடி, மிகக் குறைவாகவே இருப்பர். எங்கள் வாழ்வோடு இணைந்த இந்த நாட்கள், எந்த காலத்திலும் எங்களுக்கு மறக்காத நாட்களாக இருக்கும். இந்த வினோத நாட்கள், எங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் புதுமையாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக