இந்தியாவில் 6 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை
பீகார் மாநிலம், ராக்ஹோபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன், 6 வயது சிறுமியொருவரை கற்பழித்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தமைக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இண்டல் குமார் சர்மா என்கிற இந்திரா தாக்கூர் (வயது 30). கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் திகதி, தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவளை கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தான்.
இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக, சிறுமியின் பிணத்தை தனது வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டான். 2 நாள் கழித்து, சர்மா மீது சந்தேகம் அடைந்த சிறுமியின் தாத்தா இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு கொடுத்தார். அதன்பேரில் சர்மாவை பொலிஸார் கைது செய்து, சிறுமியின் பிணத்தை அவன் வீட்டில் இருந்து தோண்டி எடுத்தனர்.
இது தொடர்பாக சர்மா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி சுனில் குமார் சிங், குற்றம் சாட்டப்பட்ட சர்மாவுக்கு சிறுமியை கொலை செய்ததற்காக தூக்கு தண்டனையும், கற்பழித்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், சாட்சியங்களை மறைத்த குற்றத்துக்காக 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.