முதல் சந்திப்பில் காதலர்கள் நடந்து கொள்வது எப்படி ?
காதலர்களின் முதல் சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்பொழுது நடந்து கொள்ளும் முறையும்,பேசும் பேச்சுக்களும்தான் காதலை தொடர்வதா? இல்லை ஒரே நாளோடு
முடித்திக்கொள்வதா என்பதை தீர்மானிக்கும். எனவே முதல் சந்திப்பின் போது காதலர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆலோசனை தருகின்றனர் நிபுணர்கள்.
கேட்கக் கூடாதவை
தான் விரும்பும் பெண்/ஆணிடம் பேசக் கூடாத விஷயங்கள் என்று சில உண்டு. அதாவது கேட்கக் கூடாத கேள்விகள் என்று கூறலாம். ஒரு சிலர் எப்போதும் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அது தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமாக இருந்தாலும், பழக ஆரம்பித்த புதிதில் கேட்கப்படும் கேள்விகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும். எனவே சில கேள்விகளை தவிர்த்துவிடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஒருவரின் ஜாதியைப் பற்றி கேட்கக் கூடாது. அதேபோல் தனிப்பட்ட விசயங்களைக் குறித்த கேள்விகளைக் கேட்கக் கூடாது. இதுபோன்ற கேள்விகளை கேட்பவர்கள் மீதும், நாகரீகமற்றவர் என்ற முத்திரை குத்தப்படும். எனவே பேசிப் பழக ஆரம்பித்த சிறிது நாட்களில் இதுபோன்ற கேள்விகளை நிச்சயமாக தவிர்த்து விடுவது நல்லது.
சுய புராணம் வேண்டாமே
ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் சுய புராணம் பாடிக்கொண்டிருப்பார்கள். இது கூடாது சந்திப்பின் முதல் நாளிலேயே சுய புராணம் பாடுவதும் தவறு, அதேபோல அடுக்கடுக்காக கேள்விகள் கேட்பதும் தவறு. பொதுவாக விஷயங்களைப் பற்றி எளிதாகப் பேசினால் உங்கள் காதல் வளரும். இல்லையெனில் முற்றும் போட்டு விட வாய்ப்புண்டு.
மனம் விட்டு பேசுங்கள்
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள, தங்களைப் பற்றிய விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால்,தன்னைப் பற்றியும், தனக்கு நெருங்கியவர்கள் பற்றிய ரகசியங்களையும் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.சில ரகசியங்கள் சிலருக்குத் தெரியாமல் இருப்பதுதான் நல்லது. எதையாது மறைத்தால் அது காதலருக்கு செய்யும் துரோகமாக நினைக்கக் கூடாது. உங்களை சார்ந்தவர்கள் பற்றிய ரகசியங்களை காப்பது உங்கள் கடமை என்றுதான் நினைக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் நடந்து முடிந்து போயிருக்கும். அதனையெல்லாம் காதலர் / காதலி அறிந்து கொண்டே தீர வேண்டும் என்ற கட்டாயமில்லை. அப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு இது நேரமில்லை. தெரிய வேண்டிய நேரத்தில் சொல்லிக் கொள்ளலாம்.
பொதுவான இடத்தில்
முதல் சந்திப்பு ஏதாவது பார்க், ரெஸ்டாரென்ட் என பொதுவான இடமாக இருக்கட்டும். அப்பொழுதுதான் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்க முடியும். சாப்பிடும் உணவு வகைகளை இருவருக்கும் பிடித்தமானவைகளாக சேர்த்து தேர்வு செய்யுங்கள். உணவிற்கான பில்லை இருவரும் பகிர்ந்து கொடுங்கள் அதுதான் நல்லது.
தேவையில்லாத பேச்சுக்கள்
எதையாவது பேச வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையில்லாததெல்லாம் பேசினால் ஆபத்துத்தான் வரும்.சில தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதால், அதனை மற்றவர் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் மீதான ஒரு அதிருப்தியையும் ஏற்படுத்தலாம். உங்கள் நெருங்கிய நண்பர்களின், உறவினர்களின் குறைகளைப் பற்றி எப்போதும் சொல்லாதீர்கள். இதனால் அவர்கள் மீது உங்கள் காதலர்/காதலிக்கு தவறான அபிப்ராயம் ஏற்பட்டுவிடக் கூடும்.
சுமூக உறவு நிலவ
சொல்ல வேண்டியதை மட்டும் சொல்வது, தேவையில்லாதவற்றை சொல்லி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது, முக்கியமான விஷயங்களை மறைக்காமல் சொல்வது நீண்ட கால உறவுக்கு நல்லது. எனவே, ஆரம்பத்திலேயே ஒரு எல்லைக்குள் நீங்கள் இருந்தால் எப்போதும் சிக்கல் இல்லை. எதையும் உளறிக் கொட்டாமல்,சிக்கலை ஏற்படுத்தாமல், சுமூகமான உறவு நிலவ நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
0 கருத்து:
கருத்துரையிடுக