இலங்கையில் பள்ளிக்கூடத் தேவைக்காக 8 தேங்காய்கள் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 13 வயதுச் சிறுமியை காவல்துறையினர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தவறு என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நாட்டின் அமைச்சரவை கூடி ஆராய்ந்ததுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் விசாரணை நடத்துமாறு நீதியமைச்சுக்கும் கல்வியமைச்சுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
18 வயதுக்குட்பட்ட ஒருவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது, திருட்டுப் பொருளின் பெறுமதி ஐயாயிரம் ரூபாவுக்கு குறைவாக இருந்தால் அவரை நீதிமன்றத்தின் முன்னால் ஆஜர்படுத்தாமல் மீடியேஷன் போர்ட் எனப்படுகின்ற மத்தியஸ்த சபை ஒன்றின் முன்னாலேயே ஆஜர்படுத்த வேண்டுமென்று நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா பிபிசியிடம் கூறினார்.
இது தொடர்பான சட்டத்திருத்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டதாகவும் அதுபற்றிய தெளிவின்றியே இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசார் செயற்பட்டிருக்கலாம் என்றும் கமலினி டி சில்வா சுட்டிக்காட்டினார்.
குறித்த 13 வயது சிறுமியின் வழக்கில் தீர்ப்பு இன்னும் அளிக்கப்படவில்லை என்றும் சம்பவ தினத்தன்று பதில் நீதவான் ஒருவரே வழக்கை விசாரித்துள்ளதாகவும் நீதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
காவல்துறைக்கும் நீதவான்களுக்கும் தெளிவுபடுத்த நடவடிக்கை
இப்படியான வழக்குகளை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லாமல் மத்தியஸ்த சபைகளுக்கே கொண்டுசெல்லுமாறு காவல்துறையினருக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் நீதியமைச்சு கூறியது.
தலைமை நீதியரசர் தலைமையிலான நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனம் ஊடாக நீதவான்களுக்கும் தெளிவூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் நீதியமைச்சின் செயலாளர் பிபிசியிடம் கூறினார்.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவும் உள்ளடங்கும் விதத்தில் நாடு முழுவதும் 370 மத்தியஸ்த சபைகள் இயங்குவதாகவும் நீதியமைச்சு சுட்டிக்காட்டியிருக்கிறது.
இதேவேளை, 13 வயது மாணவி திருட்டுக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விவகாரத்தில் தாம் சட்டப்படியே செயற்பட்டுள்ளதாகவும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரகாரமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் இலங்கை காவல்துறை உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக