என் வீட்டில் தலைவர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோரின் போட்டோ மட்டும்தான் உள்ளது. நான் மு.க.ஸ்டாலினை பெரிதும் மதிப்பவள். அப்படியிருக்கும்போது, நான் அளித்த பேட்டியை தொண்டர்கள் தவறாக
புரிந்துகொண்டு, என் மீது திருச்சியில் தாக்குதல் நடத்தியது வருத்தமாக உள்ளது” நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் வருவதற்கு நான் முன்மொழிவேன் என்று சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.
இது தொடர்பான வாரஇதழ் ஒன்று பேட்டி அளித்த நடிகை குஷ்பு, ”தி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று நாமே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், மு.க.ஸ்டாலின்தான் எனது அடுத்த தேர்வு என்று தலைவர் கருணாநிதி சொல்லியிருக்கிறார். ஆனால், இறுதி முடிவை பொதுக்குழுதான் எடுக்கும்” என கூறியிருந்தார்.
நடிகை குஷ்புவின் இந்த கருத்தால் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொதித்தெழுந்து, சென்னை சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பு வீட்டை தி.மு.க.வினர் தாக்கினர். மேலும், அப்போது திருச்சியில் இருந்த நடிகை குஷ்பு மீது தி.மு.க.வினர் சிலர் செருப்பு வீசினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குஷ்பு, விளக்கம் அளிக்க முயன்றும், யாரும் அவரது விளக்கத்தை கேட்காமல் சென்றுவிட்டனர். இந்த நிலையில், வாரப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டிகுறித்து, நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்றும், குடும்ப ஆதிக்கம் பெருகி விட்டது என்றும், தொடர்ந்து கட்சிக்கு எதிராக கருத்துக்களை பல்வேறு செய்தி ஊடகங்கள் பரப்பி வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு இந்தக் குற்றச்சாற்றை மறுத்து நான் அளித்த பதிலை அந்த வார இதழ் வெளியிட்ட முறையில் கட்சி தோழர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
என் வழி, தலைவர் வழிதான் என்பதை எப்போதும் கூறி வருகிறேன். தலைவர் முன்மொழிவதை எப்போதும் நான் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதை என்னுடைய கடமையாக கொண்டுள்ளேன். என் வீட்டில் தலைவர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோரின் போட்டோ மட்டும்தான் உள்ளது.
நான் மு.க.ஸ்டாலினை பெரிதும் மதிப்பவள். அப்படியிருக்கும்போது, நான் அளித்த பேட்டியை தொண்டர்கள் தவறாக புரிந்துகொண்டு, என் மீது திருச்சியில் தாக்குதல் நடத்தியது வருத்தமாக உள்ளது என்று குஷ்பு கூறியுள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக