புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாடசாலைக்கு செல்வதற்காக நாளொன்றுக்கு 24 கிலோமீற்றர் நடக்கும் நான்காம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவன் இரத்தினபுரி,பலாங்கொடை நான்பெரியல்ல தோட்டத்தில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.


இந்த மாணவர் விவேகானந்தா வித்தியாலயத்திலேயே கல்விபயின்று வருகின்றார். இந்த பாடசாலை மற்றுமொரு தோட்டத்திலேயே இருக்கின்றது.

சப்ரகமுவ மாகாண சபை உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழு முதலமைச்சர் மஹிபால ஹேரத்துடன் இப்பகுதிக்கு விஜயம் செய்தது.

நான்காம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவன் பாடசாலை செல்வதற்கு அதிகாலை 4 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுவார் என்றும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்கு இரவு 7 மணியாகிவிடும் என்றும் இந்த குழுவினர் கண்டறிந்துக்கொண்டனர்.

குடும்பத்தில் மூத்தபிள்ளையான இவர் தனது பெற்றோருடன் நெக்குரேன் தோட்டத்தில் வசித்து வருகின்றார். இந்த தோட்டம் சப்ரகமுவவில் அதியுயரமான பகுதியிலேயே இருக்கின்றது.

மலைப்பாங்கான இப்பகுதியில் போதியளவான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. வீதிகளும் குத்துசரிவானதாகவே இருக்கின்றது.

சில காலங்களில் வீசுகின்ற பலமான காற்று பொது மக்களின் போக்குவரத்திற்கு கூட தடையாக அமைந்துவிடுகின்றது. இந்த தோட்டம் கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்திலும் பலாங்கொடையிலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கின்றது.

இந்த தோட்டத்தில் வாழ்கின்ற 16 பிள்ளைகளில் இவர் மட்டுமே பாடசாலைக்கு செல்கின்றார். இந்நிலையில் ஏனைய 15 மாணவர்களுக்கும் கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

குறித்த மாணவனை சந்தித்த முதலமைச்சர் இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியிலும் கல்வியை தொடர்வதனையிட்டு அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top